பக்கம் எண் :

199
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

சிவராமகிருஷ்ணையர். பிடில் நன்றாய் வாசிப்பார்.

சிவராமகிருஷ்ணையர். இவர் மானம்புச்சாவடி வேங்கடசுப்ப ஐயரின் மாணாக்கராகிய சுப்பராமபாகவதர் குமாரர். தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளை பிடிலில் நன்றாய் வாசிப்பார்.

சிவானந்தம். திருநெல்வேலி மகாதேவ அண்ணாவியின் குமாரர். இவர் சங்கீதத்திலும் பரதத்திலும் கெட்டிக்காரர். இவருக்கு மகாதேவன் சாமிநாதன் என்று இரண்டு பிள்ளைகள். இவர் சடைமுடி, சுந்தரம், தோகூர் சுப்பலக்ஷிமி, புதுக்கோட்டை அம்மாளு முதலியவர்களுக்கு நிருத்தம் சொல்லி வைத்திருக்கிறார்.

சிவானந்தம் நட்டுவனார். இவர் தஞ்சாவூர் வடிவேல்நட்டுவனாரின் சகோதரர். பரதசங்கீதசாஸ்திரத்தில் தேர்ந்தவர். பாவம்சொல்லிவைப்பதில் மிகவும் வல்லவர். சிவாஜிமகாராஜாவால் மிகவும் கொண்டாடப் பெற்றவர். அநேகருக்கு பாவம் சொல்லிவைத்திருக்கிறார்.

சின்னசாமி. திருக்கழுக்குன்றம். ஆர்மோனியம் சுகமாய் வாசிப்பார்.

சின்னசாமி தீக்ஷதர். இவர் இராமசுவாமி தீக்ஷதரின் பிள்ளை. முத்துசுவாமி தீக்ஷதரின் தம்பி, சங்கீதத்திலும், வீணை வாசிப்பதிலும், பாடுவதிலும் சிறந்த வித்வான். கலியாணி இராகத்தில் கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.

சின்னசாமித்தேவர். சொக்கம்பட்டி. இவர் சொக்கம்பட்டி ஜமீன்தாரின் தம்பி, சங்கீதசாகித்தியத்திலும் வீணைவாசிப்பிலும் தமிழிலும் பெரிய வித்வான்.

சின்னசாமி பாகவதர். திருவள்ளூர். இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் அநேக நிரூபணங்களை எழுதியிருக்கிறார்.

சின்னசாமி முதலியார். M.A., இவர் Chief Secretariatல் உத்தியோகத்திலிருந்தார். சங்கீதத்தில் அதிக விருப்பமும் அபிமானமும் உள்ளவர். தென்னிந்திய சங்கீதத்தை ஒழுங்கு படுத்தவேணுமென்று தம்முடைய சரீரப்பிரயாசத்தையும் தம்முடைய திரவியம் முழுவதையும் செலவுசெய்தவர். இந்துசங்கீதத்தை ஐரோப்பியசங்கீத Staff notation ல் போடும்படியாக பிரயாசப்பட்டு சிலவைகளை அச்சிட்டார். தான் எடுத்துக்கொண்ட காரியம் முற்றுப்பெறாமலே காலஞ்சென்றுபோனார்.

சின்னச்சாமையா. இவர் தட்டார நக்கையாவின் தமயன் குமாரர். வெகு சுகமாயும் விதரணையாயும் பாடுவார்.

சின்னத்தம்பி அண்ணாவி. மதுரை மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தின் நட்டுவாங்க பரம்பரையைச் சேர்ந்தவர். பரதத்தில் தேர்ந்தவர்.

சின்னத்தேவையா. கரூர். நன்றாய்ப் பாடுவார். கர்நாடக சுத்தமாய் பிடில் வாசிப்பார்.

சின்ன பாரதி. மாயவரம். தமிழிலும், சங்கீதத்திலும் நல்ல பாண்டித்ய முடையவர்.

சின்ன வைத்தி, பெரிய வைத்தி. இவர்கள் சகோதரர்கள். சிவகங்கைக்குச் சமீபத்திலுள்ள இராதா மங்கலம் இவர்கள் பிறந்த இடம். சிவகங்சை சமஸ்தானத்தில் சங்கீதத்தில் மகாவித்வான்கள். இரண்டுபேரும் சேர்ந்துபாடினால் வெகு அழகாயிருக்கும்.

சின்னையா, பொன்னையா, வடிவேல். இவர்கள் மூன்று பேரும் நிருத்தத்துக்காக தாங்கள் சலாம், ஜதி, வர்ணங்கள், தில்லானாக்கள், இராகமாலிகைகள் செய்திருக்கிறார்கள். இவைகளைப் பாடக்கேட்கும் ஜனங்கள் அதிக ஆனந்தமாய்ப் பரவசப்படுவார்கள். திருவனந்தபுரம் சமஸ்தானத்திலிருந்தார்கள்.