பக்கம் எண் :

1327
 

"நந்தி யருளாலே மூலனை நாடினேன்."

"நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே."

"நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்."

என்ற தமிழ் மூவாயிரச் செய்யுள் அடிகளால் அறியலாம்.

சுந்தரநாதர் திருவருள் இயக்க இரண்டாம் தடவை தென்னாடு போந்த காலத்தில், மூலன் தேகத்தில் புக நேர்ந்ததும், ஒன்பது ஆகமங்களையும் ஒன்பது தந்திரங்களாகப் பாடித் "தமிழ் மூவாயிரம்" என்று பெயர் கொடுத்ததும் ஆகும். முதல் தடவைக்கும் இரண்டாம் தடவைக்கும் ஏறக்குறைய 3000 ஆண்டுகள் இடையே உள்ளன.

(ஊ) திருமூலர் காலம்

அறுபான் மும்மை நாயன்மார்களில் திருமூலரும் ஒருவர். அவர் தாம் பாடிய "தமழ் மூவாயிரத்தில்" சேய்ஞ்ஞலூர்ச் சண்டியைப்பற்றி மாத்திரம் கூறியுள்ளார். மற்ற நாயன்மார்களுடைய பெயர்கள் அவர் நூலில் இல்லை. சண்டியைப்பற்றிக் கூறும் செய்யுள் வருமாறு :

"உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆனைந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே."

இதனால் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளை ஒருவர் மாத்திரம் திருமூலருக்கு முந்தியவர் என்றும், ஏனைய நாயன்மார்கள் எல்லாம் பிந்தியவர்கள் என்றும் அறிகிறோம்.

இன்னும், தமிழ் மூவாயிரத்தில் (1) அகத்தியர், (2) திரிபுராதிகள், (3) இராவணன், (4) சலந்தரன், (5) தக்கன், (6) அந்தக அசுரன், (7) மார்க்கண்டர் முதலியவர்களைப்பற்றியும் திருமூலர் கூறியுள்ளார். இவர்களில் பெரும்பாலார் திருமூலருக்கு முந்தியவர்களாயும், சிலர் சம காலத்தவர்களாயும் இருக்கிறார்கள்.

திருமூலருக்குச் சம காலத்தவரான பதஞ்சலி வியாக்கிரமர் முதலிய எழுவரில் தசரத இராமருக்குக் குலகுருவாயிருந்த வசிட்டருடைய தங்கையை மணந்தவர் வியாக்கிரமர். வியாக்கிரமருடைய பிள்ளைதான் உபமன்னியு.