இடங்களில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்களையும் பொருள்களையும் நோக்குமிடத்து அவைகள் எல்லாம் 5000 B. C-க்குப் பல்லாண்டுகள் முற்பட்டவை என்றும், அவைகள் எல்லாம் தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றன என்றும், அந்நாகரிகம் ஆரியர் இந்தியாவுக்கு வருவதற்குப் பன்னூறாண்டுகள் முன்னர் இருந்த நாகரிகம் என்றும், அக் கட்டடங்களில் தமிழில் உருவ எழுத்துக்களால் செதுக்கப்பட்ட பல வரிகள் காணப்படுகின்றன என்றும், அது கற்காலத்துக்கும் (Neo-Lithic-Age), செப்புக் காலத்துக்கும் (Copper Age) இடைப்பட்ட நாகரிகத்தைக் கொண்டதென்றும், தமிழருக்கே சிறப்பான மூக்கு ஆபரணங்களும் தாலி முதலிய கழுத்து ஆபரணங்களும் அக் கட்டடங்களில் காணப்படுகின்றன என்றும் அறிஞர் சர் ஜான் மார்ஷல் என்பவரும், ரெவரெண்டு ஈராஸ் என்னும் பாதிரியாரும் கூறுகின்றனர். தமிழ்மொழியானது முதன்முதல் உருவ எழுத்துக்களையும், பின் கோல் எழுத்துக்களையும், பின் வட்ட எழுத்துக்களையும், பின் சதுர எழுத்துக்கடையுங் கொண்டு மாறுதல் அடைந்து வந்திருக்கிறது. இஃது ஆராய்ச்சியாளர் துணிபு. உருவ எழுத்துக் காலத்திலேதான் தமிழில் இருந்து சீனம் - கடாரம் - சுமேரியம் - பினீசியம் - எகுபதியம் முதலிய பல மொழிகள் பிரிந்தன. கோல் எழுத்துக் காலத்தில் தமிழில் இருந்து மராட்டியம் - வங்கம் - கோசலம் - பலுச்சியம் - ஆரியம் - பாளி - பிராகிருதம் முதலிய பலமொழிகள் பிரிந்தன. வட்ட எழுத்துக் காலத்தில் தமிழில் இருந்து தெலுங்கு - கன்னடம் - துளு - மலையாளம் முதலிய மொழிகள் பிரிந்தன. தமிழுக்குத் தற்காலம் சதுர எழுத்துக் காலம். ஆரியர்கள் வடமேற்குக் கணவாய்கள் வழியாய்த் தமிழ் நாட்டில் நுழைந்தது கோல் எழுத்துக் காலத்தில் ஆகும். அஃதாவது, அரப்பா - மொகஞ்சதாரோ முதலிய தமிழருடைய நகரங்கள் மண்மாரியால் அழிவெய்திய பிற்றைக் காலத்தில் ஆரியர்கள் முதன்முதல் சிந்துநதிப் பிரதேசத்தில் குடியேறி, பிறகு கங்கை பாயும் நாட்டை விந்தியமலை வரை வென்று, ஆரியாவர்த்தத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள். ஆரியா வர்த்தத்துக்கு இந்துஸ்தானம் என்று பெயர். இந்துஸ்தானம் என்ற பெயருக்கு இந்துக்கள் வசிக்கும் இடம் என்பது பொருள் ஆரியருக்கு இந்துக்கள் என்ற பெயர் பாரசீகர்களால் கொடுக்கப்பட்டது. "இந்து" என்ற பதம் பாரசீக மொழியைச் சேர்ந்தது.
|