ஆரியர் ஆரியாவர்த்தத்தை நிலைநாட்டிய காலத்தில் பல தமிழ்மன்னர்கள், விஸ்வாமித்திரர் - சனகர் முதலியோர் ஆரிய மதத்தை ஆநுசரித்துக் கொண்டார்கள். சைவராயிருந்து சைன மதத்துக்குப்போன திருநாவுக்கரசு சுவாமிகளுக்குச் சைனர்கள் தங்களுடைய மதத்தலைமை கொடுத்ததுபோல தமிழராயிருந்து ஆரியமதத்தை அநுசரித்த விசுவாமித்திரருக்குப் "பிரமரிஷி"ப் பட்டமும் சனகருக்கு "ஞானரிஷி"ப் பட்டமும் ஆரியர்கள் அளித்து, மேலும் பல தமிழர்கள் ஆரியமதத்தை அநுசரிக்கும் பொருட்டு அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். ஆரியமதத்தை அநுசரிக்காத தமிழ்மன்னர்களும் ஏனைத் தமிழ்ச் சான்றோரும் விந்தியமலைக்குத் தெற்கே தக்கணம் என்ற தமிழ்நாட்டின் பகுதிக்கு ஓடி வந்துவிட்டார்கள். தக்காணத்திலேதான் தமிழுக்குப்பின் வட்டெழுத்துக் காலம் துவங்கிற்று. கோல் எழுத்துக் காலத்தில் தமிழில் 16 உயிர்களும் 35 மெய்களும் இருந்தது போலவே வட்ட எழுத்துக் காலத்திலும் மேலே சொன்ன 51 எழுத்துகக்ளும் இருந்தன. ஆரியாவர்த்தத்தில் கோல் எழுத்துக்களால் வழங்கிய மொழிகளுக்கு வடதமிழ் - வடமொழி என்றும், தக்காணத்தில் வட்டெழுத்துக்களால் வழங்கிய மொழிகளுக்குத் தென்தமிழ் தென்மொழி என்றும் வழக்குகள் ஏற்பட்டன. பிறகு, பாரதகாலத்துக்குச் சற்று முன்பின் தமிழுக்குச் சதுர எழுத்துக் காலம் ஆரம்பம் ஆயிற்று. சதுர எழுத்துக் காலத்திலே தான் தமிழுக்கு 12 உயிர்களும், 18 மெய்களும் ஆக அறிஞர்கள் வகுத்தார்கள். இக்காலத்திலேதான் துவராபதியினின்றும் வந்த உலோபா முத்திரை அகத்தியர். பேரகத்தியம், சிற்றகத்தியம் என இரண்டு இலக்கண நூல்களை வகுத்தார். பழந்தமிழ் மொழியினின்றும் வேறு பிரிந்து "செந்தமிழ்" எனத் தமிழ்மொழிக்குப் பெயரிட்டார். தமிழ்மொழி மிகச் சீர்திருந்திய முறையில் ஆய்த எழுத்தைச் சேர்த்து 31 எழுத்துக்களுடன் வழங்கலாயின. இதே மாதிரி வியாசரும் வடநாட்டில் வழங்கிய மொழிகளாகிய ஆரியம் - பிராகிருதம் முதலியவைகளைச் சீர்திருத்திச் 'சம்ஸ்கிருதம்' எனப் பெயர் அமைத்து, சமஸ்கிருதத்தில், பல புராணங்களும் இதிகாசங்களும் எழுதினார். ஆனால், அவர் தமிழில் இருந்த கோல் எழுத்துக்களையே கருவியாகக் கொண்டனர். அதனாலேயே சமஸ்கிருதத்துக்கு 'வடதமிழ்' என்ற பெயரும் அமைந்தது. திருமூலருடைய காலம் 'இராமாயண காலம்' என்று மேலே கூறினாம். இராமாயண காலம் தமிழுக்கு வட்டெழுத்துக் காலம் ஆகும்.
|