பக்கம் எண் :

1334
 

மேலும் திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பிகள்,
". . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . முழுத்தமிழின்
படிமன்னு வேதததின் சொற்படி யேபர விட்டென்னுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல னாகின்ற அங்கணனே."

என்று திருவந்தாதியில் திருமூலரைப்பற்றிக் கூறுவதை நோக்குங்கள். முழுத்தமிழின்படி மன்னும் வேதத்தின் சொற்படி பாடியதாகக் கூறுகிறார். ஆதலின், திருமூலர் வேறு மொழிகளின் எழுத்துக்களைப் பற்றி முழுத்தமிழ் நூலாகிய தமிழ் மூவாயிரத்தின்கண் கூற ஒரு சிறிதும் நியாயம் இல்லை.

ஆகையால், திருமூலர் தமிழுக்கு வட்டெழுத்துக் காலத்தவர் என்பது நிச்சயம்.

இராமாயண காலத்தில் அயோத்தியிலும், கோசலத்திலும், கிட்கிந்தையிலும், இன்னும் வடநாட்டில் பல இடங்களிலும் தமிழ்மொழி பொது மொழியாக இருந்ததென்று திருவாளர், திரு நாராயண அய்யங்கார் 1939-ஆம் வருடச் 'செந்தமிழ்' பத்திரிகையில் "வன்மீகரும் தமிழும்" என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். ஆதலின் தமிழ்மொழி இராமாயண காலத்தில் வட பெருங்கல்லில் இருந்து தென்குமரியாறுவரை பரவியிருந்ததென்று அறியலாம்.

அல்லாமலும் அக்காலத்தில் தமிழ்மொழியானது 5 கண்டங்களிலும் பரவி இருந்ததாக அறிகிறோம். தமிழ்மொழியின் இந்த நிலையைத்தான்,

"தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழு மனமும்எம் மாதி அறிவும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே."

என்று திருமூலர் கூறியுள்ளார்.

தமிழ் மண்டலம் என்பதற்குச் சில பஞ்ச திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டிரம் வழங்கும் மண்டலங்கள் என்றும்; சேர, சோழ, பாண்டிய, கொங்கு, தொண்டை மண்டலங்கள் என்றும் பொருள் செய்து இடர்ப்படுவார் ஆயினர்.

ஈண்டு மண்டலம் என்று திருமூலர் கூறியது ஆசியா - ஐரோப்பா - ஆபிரிக்கா - அமெரிக்கா - ஆஸ்திரேலியாக் கண்டங்களையே ஆகும். மண்டலம் = மண் + தலம் எனப் பிரிக்க. அப் பாட்டிலேயே, தமிழ்நாட்டுச்