சித்தர் குழாஅங்கள் அக் கண்டங்களிலே "ஞானம் உமிழ்வதுபோல உலகம் திரிவார்" எனக் கூறி மண்டலம் என்பது உலகம் (கண்டங்கள்) என்று விளக்கியுள்ளார். சுத்த தத்துவத்தினின்று அசுத்த தத்துவமும், அசுத்த தத்துவத்தினின்று பிரகிருதி தத்துவமும் தோன்றுகிறபடியால், சுத்த தத்துவத்திலேயே முத்தமிழ் வேதம் தோன்றியதெனச், "சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்." என்று திருமூலர் கூறியுள்ளார். இதனானே, அக் காலத்தில் இமயமுதல் குமரிவரை, அங்கம் முதல் காந்தாரம் வரை வழங்கிய 18 மொழிகளும், தமிழினின்றுமே பிறந்தன என்பது வெள்ளிடைமலை. பதினெண் மொழிகளாவன : "சிங்களம், சோனகம், சீனம், சாவகம், கொங்கணம், குடகம், கொல்லம், துளுவம், வங்கம், கடாரம், மகதம், கோசலம், கங்கம், காச்மீரம், கலிங்கம், நேபாளம், அங்கம், காந்தாரம் ஆகிய மொழிகள் தங்கி வளரும் தமிழ்நா டென்ப." என்னும் பாட்டால் அறியலாம். அக் காலத்தில் பண்டிதர்கள் எல்லாம் 18 மொழிகளிலும் வல்லுநராய் இருந்தனர். இதனையே, "பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலா அரன்சொன்ன வாறே." என்று நம் மூலர் கூறியுள்ளார். தமிழ் மொழியை "மதுரம் வாக்யம்" (- இனியமொழி - தமிழ் மொழி) என்றும், அதுதான் 'மனிதர் மொழி' என்றும், வான்மீகர் இராமாயணத்தில் கூறுகிறதாகச் 'செந்தமிழ்' பத்திராசிரியர் கூறுகிறார் (Vide செந்தமிழ் Vol. 36 No. 7). "தமிழ் மாநுஷ பாஷையென்று பொதுப்படக் கூறப்பட்டமையால், அக் காலத்தில் மானிடர் வாழும் இடம் எங்கும் தேச பாஷையாகத் தமிழ்மொழி நடைபெற்று இருந்த தென்று அறியத்தக்கது." என்றும் பத்திராசிரியர் கூறுகின்றார்.
|