பக்கம் எண் :

1336
 

மேலும் செந்தமிழ் Vol. 36 No. 8 - இல் பக்கம் 341 - இல் "மானிடர்க்கும் பிறப்புரிமையாயுள்ள பாஷை ஒன்று இருக்க வேண்டுமன்றே! அது தமிழ்மொழி என்றும், பின்பு செயற்கையாயுள்ள பாஷை தேவபாஷை முதலிய பிறமொழிகள் என்றும் கொள்ளத்தகும்" என்றும் கூறுகிறதால் ஐந்து கண்டங்களிலும் உள்ள மானிடர் எல்லாருக்கும் பிறப்புரிமையாயுள்ள மொழி தமிழ்மொழியேயாகும்.

ஆதலின், திருமூலர் காலத்தில் தற்காலம் 'இந்தியா' என்று வழங்கும் தமிழ்நாடுகளில் எல்லாம் தமிழ்மொழியே பெருவழக்காக இருந்தது என்பது பெற்றாம்.

அரப்பா - மொகஞ்சதாரோ நாகரிகம் எல்லாம் தமிழில் உருவ எழுத்துக் காலமாகும். அக் காலக் கடைசியில் மண் மாரி பெய்து, பெரிய நகரங்கள் எல்லாம் அழிந்து, பெரிய மாறுதல் உண்டாயிற்று.
அதன் பிறகு, தமிழில் கோல் எழுத்துக் காலம் ஏற்பட்டது. அக் காலத்திலேதான் ஆரியர் சிந்துநதி தீரத்தில் குடி ஏறினார்கள். பிறகு இருக்க இருக்க தமிழர்க்கும் ஆரியர்க்கும் சச்சரவுகள் ஏற்பட்டன. ஆரியர்கள் தமிழர்களை வென்று, தமிழர் நாடு நகரங்களை அழித்து, பல தமிழ் அரசர்களைத் தம் வயப்படுத்தி, எதிர்த்தோரை விந்தத்துக்குத் தெற்கே விரட்டி விட்டார்கள். ஆரிய மொழிக்கு எழுத்தில்லாததால் தமிழ்க் கோல் எழுத்துக்களைத் தங்கள் மொழிக்குச் சில மாறுதல்களுடன் நெடுங்கணக்காக வகுத்துக் கொண்டார்கள். சிந்துநதிப் பக்கத்திலும், கங்கை பாயும் நாட்டிலும் தமிழர் நாகரிகம் பாழ்படுத்தப்பட்டது என்பதை ஆரியர்களுடைய இருக்கு வேதத்தைப் படிப்பவர் அறியாமல் இரார்.

ஆரியர்களுக்கு விந்தியமலைக்கு வடக்கே உள்ள நிலங்கள் முழுவதையும் விட்டுவிட்டு, தமிழர்கள் தெற்கே தக்காணத்துக்கு வந்து தம் இனத்தவருடன் கலந்துகொண்டார்கள். அக்காலத்திலேதான் தமிழுக்கு வட்டெழுத்துக் காலம் ஆரம்பமாயிற்று. வட்டெழுத்துக் காலக் கடைசியிலேதான் இராமாயண காலம்.

ஆர்யாவர்த்தத்தை ஏற்படுத்திய பிறகு பல ஆண்டுகள்வரை ஆரியா தக்கணத்துக்கு வராமல் இருந்தார்கள். ஆரிய இருடிகள் ஆரியரைத் தக்கணத்துக்குச் செல்லக்கூடாதென்று தம்முடைய ஒழுக்க நூல்களில் விதித்தும் இருந்தார்கள். ஆபஸ்தம்பர் - போதாயனர் முதலியோர் சூத்திரங்களே இதற்குச் சான்று பகரும்.