அவர் தமிழ் மூவாயிரத்தில் பாடியுள்ள சில செய்யுட்களைப் பார்த்தால் அவர் அத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கமுடியும் என்று நம்புவார்கள். அப் பாட்டுக்களாவன "வளியினை வாங்கி வயத்தி லடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வெட்டு வளியனு மாமே." (551) "நீல நிறனுடை நேரிழை யாளொடும் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞால மறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி யாணையே." (718) என்றும், "எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே அதுசெய்யில் ஆக்கைக்கு அழிவில்லை." (552) "அண்டம் சுருங்கில் ஆக்கைக்கு அழிவில்லை." (715) "நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமு மில்லை மனைக்கும் அழிவில்லை." (584) "ஈராறு கால்கொண்டு எழுந்த புரவியைப் பேராமற் கட்டிப் பெரிதுண வல்லிரேல் நீரா யிரமும் நிலமா யிரத்தாண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே." (702) என்றும், "காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்கும் குறியது வாமே." (553) மூல நாடி மூக்கட் டலக்குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காண் மேலை வாயில் வெளியுறக் கண்டபின் காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே." (602) என்றும், "உடம்பா ரழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே." (704) என்றும், நாயனார் தம் அனுபவத்தைக் கூறியுள்ளார். "தாம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்பது ஆன்றோர் கொள்கையாதலால், உலகத்தார் உய்யும்பொருட்டு மேற்சொன்ன கூற்றை உரைக்கும் முறைகளைத் தம் நூலின்கண் அருளிச் செய்துள்ளார்.
|