பக்கம் எண் :

809திருத்தொண்டர் திருவந்தாதி

கணம்புல்ல நாயனார்

1150.நன்னக ராய விருக்குவே ளூர்தனில் நல்குரவாய்ப்
பொன்னக ராயநல் தில்லை புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய வரற்குநற் புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோளெந்தை தந்தை பிரானெம் கணம்புல்லனே

58

காரி நாயனார்

1151.புல்லன வாகா வகையுல கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வுந்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கானென்பரால்
கல்லன மாமதில் சூழ்கட வூரினில் காரியையே.

59


வீரபத்திரர் செயல் இங்குச் சிவபெருமான் செயலாகக் கூறப் பட்டது. சொல்லவன் - சொற்களை உடையவன். நாட்டியத்தான் குடி, கோட்புலி நாயனாரது ஊர். "மாணிக்க வண்ணன்" என்றது இங்குள்ள சிவபெருமானையே.

1150. குறிப்புரை: நற் புல் - 'கணம்புல்' என்னும் ஒரு வகைப் புல். கல் நவில் - கல்போலும் தோள். இந்நாயனார் மரபு அறியப்படவில்லை. "எந்தை தந்தை பிரான்" என்றது, 'எம் குடி முழுதையும் ஆட்கொண்டவன்' என்றபடி.

1151. குறிப்புரை: 'உலகத்துப் புணர்ந்தனவும் புல்லன ஆகா வகை ஆக்கி' என இயைக்க. உலகத்துப் புணர்ந்தன, பொருளிலக்கணத்தில் சொல்லப்பட்ட 'முதற்பொருள், கருப் பொருள், உரிப்பொருள்' என்னும் மூவகைப் பொருள்கள். வெளிக்கு அவைகளைப் பாடுவது போலத் தோன்றும்படி பாடல்களைப் பாடி. அவற்றினுள்ளே சிவனது பெருமை உள்ளுறையாக அமையச் செய்தவர் இந்நாயனார். அதனால், "உலகத்துப் புணர்ந்தனவும் புல்லன ஆகா வகை நயமாக்கி" என்றார். 'சொல்லின உள் நயமாக்கி' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். புல்லன - கீழான தன்மையை உடையன. அவை உலக நிகழ்ச்சிகள். இவ்வாறான பாடல்களால் மூவேந்தர் களைப் பாடி மகிழ்வித்து, அவர் தந்த பரிசுப் பொருளைக் கொண்டு சிவத்தொண்டும், சிவனடியார் தொண்டும் செய்தவர் இந் நாயனார். இவரது மரபும் அறியப்படவில்லை. இவர் சங்கப் புலவராகிய காரிகிழாராயின் வேளாண் மரபினராவர்.