பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை810

நெடுமாற நாயனார்

1152.கார்த்தண் முகிற்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ரழிந்தது கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே.

60

வாயிலார் நாயனார்

1153.மாறா வருளரன் தன்னை மனவா லயத்திருத்தி
ஆறா வறிவா மொளிவிளக் கேற்றி யகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா னென்று விளம்புவரே.

61

முனையடுவார் நாயனார்

1154.என்று விளம்புவர் நீடு ரதிபன் முனையடுவோன்
என்று மமரு ளழிந்தவர்க் காக்கூலி யேற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வ மெல்லாங் கனகநன் மேருவென்னுங்
குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே.

62


1152. குறிப்புரை: கை - பக்கங்கள் "முகிற் கை" என்பது கடலுக்கு அடை. காழியர் பெருமான் - திருஞானசம்பந்தர். அழிந்தது - தோற்றது. பஞ்சவன் - பாண்டியன். வார்த்தை - புகழ். அது, பகுதிப் பொருள் விகுதி. 'மாறனுக்கு உரியது' என ஈற்றில் ஒருசொல் வருவித்து முடிக்க. இவ்வாறு உரையாது 'வார்த்தை யதுவுண்டு' எனப் பாடம் ஓதலும் ஆம். 'பகைவரை வென்ற' எனவும் ஒரு சொல் வருவிக்க.

1153. குறிப்புரை: 'ஆறா விளக்கு' - என இயையும். ஆறா விளக்கு - அணையா விளக்கு. அக மலர்வு - நெஞ்சில் எழுகின்ற சிவ நினைவுகள். அமிர்தம் - நிவேதனம்.

1154. குறிப்புரை: "என்று விளம்புவர்" என்பதை இறுதியிற் கூட்டியுரைக்க. அழிந்தவர் - தோற்றவர். எறிந்து - கூலி கொடுத்தவரை எதிர்த்து நின்றோரைத் தாக்கி. பெருஞ்செல்வம் - படைக்கூலியாகப் பெற்றதனால் வந்த பெருஞ்செல்வம். சிலை - வில், தமர் - அடியார்.