சுந்தரமூர்த்தி நாயனார் | 1155. | கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிரன்று புக்கொளியூர்த் தொடுத்தான் மதுர கவியவி நாசியை வேடர்சுற்றம் படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன் மடுத்தா னவனென்பர் வன்றொண்ட னாகின்ற மாதவனே. | | 53 |
கழற்சிங்க நாயனார் | 1156. | மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை யரியப்பொற்கை காதிவைத் தன்றோ வரிவதென் றாங்கவள் கைதடிந்தான் நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங் கோதைக் கழற்சிங்கனே. | | 54 |
1155. குறிப்புரை: 'அன்று புக்கொளியூரில், முதலை கொள் பிள்ளைக்கு உயிர் கொடுத்தான்' என்றும், 'அவிநாசியை மதுர கவி தொடுத்தான்' என்றும், 'திருமுருகன் பூண்டியினில் வேடர் சுற்றம் படுத்தான்' என்றும் கூட்டுக. மதுரம் - இனிமை. 'கவியால் தொடுத்தான்' என உருபு விரிக்க. தொடுத்தான் - தொடுத்துப் பாடினான். புக்கொளியூர், ஊர்ப் பெயர். அவிநாசி, அவ்வூரில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர். அவிநாசி - விநாசம் (அழிவு) இல்லாதவன். படுத்தான் - வென்றான். பராபரம் - மேலனவும், கீழனவும் ஆகிய அனைத்துப் பொருள்களுமாய் உள்ள பொருள்; பரம்பொருள். இஃது ஆகுபெயராய், அதன்பால் உள்ள இன்பத்தைக் குறித்தது. மடுத்தான் - உண்டான். 1156. குறிப்புரை: ஆரூர் மணி, திருவாரூரில் எழுந்தருளி யுள்ள இறைவன். "மாதவத்தோர் - தங்கள் வைப்பு" ஆவானும் அவனே. போது - மலர். தேவி - பட்டத்துத் தேவி. 'அவளது மூக்கை அரிந்தவர் செருத்துணை நாயனார்' என்பது பின்னர் வரும் பாட்டால் விளங்கும். காதி - வெட்டி. "வைத்து" என்பது, 'முன்னர்ச் செய்து' எனப் பொருள் தந்து நின்றது. எனவே, அரிவது, பின்னர்ச் செயற்பாலதாயிற்று. "மொய்த்து ஆர் நாத வண்டு" எனக் கூட்டுக. ஆர்த்தல் - ஒலித்தல். நாதம் இசை. இந்நாயனாரைச் சுந்தரர் "கடல் சூழ்ந்த உலகெலாம் எனப் புகழ்ந்திருக்கவும் சேக்கிழார் புராணம் இவரை "குறுநில மன்னர்" என்றே கூறிற்று.
|