பக்கம் எண் :

853ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1232.கருதத் தவவருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே! கலங்கல் இவருடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன்; நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பரு ளேறி மறைகுவனே.

51

1233.மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட, வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல்
துறைமுழங் குங்கரி சீறி, மடங்கல் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே.

52

1234.பழிக்கே தகுகின்ற(து) இன்(று)இப் பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும்
 

1232. குறிப்புரை: தவ அருள் - தவம் வாய்ப்பதற்கான அருள். இனி, "தவ" என்பதனை, மிகுதி குறித்த உரிச்சொல்லாகக் கொள்ளலும் ஆம். 'சண்பை மாதே' என இயையும். 'ரசம்' என்னும் ஆரியச் சொல் தமிழில் 'இரதம்' எனத் திரிந்து வரும், 'சுவை' என்பது அதன் பொருள். சுவை உவமைக்குப் பொருட்கும் உள்ள பொதுத் தன்மை. கலங்கல் - அஞ்சற்க. இவர் - நம்மைத் தொடர்ந்து "வருகின்ற இவர்கள், ஆறலை கள்வர் முதலியோராயின் கழு நிரையில் ஏற்றுவேன்; நும் தமரது போர்ப் படையாயின், பொதும்பருள் மருதச் சினை ஏறி மறைகுவன்" என்க. 'நீ அவருடன் சென்றுவிடு' என்பது குறிப்பெச்சம். எனவே, இப்பாட்டு உடன் போக்கில் தமர் வரவைத் தலைவி காட்டியவிடத்துத் தலைவன் தலைவிக்குக் கூறியதாம். சினை - கிளை. பொதும்பர் - மரச் செறிவு. பொருது - போர் செய்து. 'அக்கழு' என்னும் சுட்டு, சமணர் ஏறிய கழுவைச் சுட்டிற்று.

1233. குறிப்புரை: இப்பாட்டு, தோழி வரைவு கடாதல் வேண்டி ஆற்றினது அருமை கூறித் தலைவனைக் குறி வரல் விலக்கியது.

மறை முழங்கும் குரல், அந்தணர்களுடையது, 'குழல்' என்பது பாடம் அன்று. ஆர்கலி - கடல். என்றது அதன் தன்மையை. அஃதாவது ஒலி. பற்றலர் - வருதல்போல நீவரின்' - என்க. 'தீயூழ் உடையவரே இவ்வழியில் வருவர்' என்பதாம். துறை - கிளை வழிகள். "சீறி" என்பது, 'ஞாயிறு பட்டு வந்தான் என்பது போலக் காலப் பொருள் பற்றி வந்த செயவென் எச்சத் திரிபு. மடங்கல் - சிங்கம். அறை - குகை. மலைகளில் பளிங்குப் பகுதிகள் இருத்தல் இயல்பு. 'அரும் பழி சாலவரும்' என ஒரு சொல் வருவித்து முடிக்க. இனி, மோனை நயம் கருதாது, 'பழி சால வரும்' என முடித்தலும் ஆம். 'தலைவனே! நீ வரின்' என விளி வருவித்துக் கொள்க.