பக்கம் எண் :

855ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1236.குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்றன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வல்லியன் னீர்!வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும்
புண்தகக் கேழல் புகுந்ததுண் டோ?நுங்கள் பூம்புனத்தே.

55

1237.புனத்தெழு கைம்மதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்,
வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்,வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொஞ்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாயல்கு லாய்த்திவர் கட்டுரையே.

56

 

குண்டர்கள்' என இயையும். "கோளரிக்கும்" என்பதன் ஈற்று மகரமெய்கெட, நகர ஒற்று மிக்கது விரித்தல் விகாரம்.

1236. குறிப்புரை: இப்பாட்டு, களவியலில் தலைவன் தோழி, தலைவி இருவரும் உள்ள இடத்துச் சென்று தோழி தன் குறிப்பையறிதற் பொருட்டுக் கெடுதி வினாயது கெடுதி - தொலைந்து போன பொருள் அதைப் பற்றி வினாவியது என்க.

குண்டு - ஆழம், 'குன்றகம் சேர் மலர் வல்லி' என்க. வல்லி - கொடி. அன்னீர் - போன்றவர்களே. வரி வில் - விரிந்து கட்டப்பட்ட வில். அதுபோலும் உங்களது புருவத்தைச் சார்ந்துள்ள உங்களது, கண் தக - கண்கள் பாய்வது போல, வாளி பட - (யான் எய்த) அம்பு பட்டமையால். செங் கலங்கல் - குருதி. புண் தக - புண் பொருந்த. கேழல் - காட்டுப் பன்றி. 'வேழம்' எனப் பாடம் ஓதலும் ஆம்.

1237. குறிப்புரை: இப்பாட்டு, முன்பாட்டை அடுத்துப் பாங்கி, மதியுடம்பட்டது. அஃதாவது, 'தலைவன் கெடுதி வினாவ இங்கு வரவில்லை; தலைவியை அடைதற்கு என் துணையை வேண்டியே இங்கு வந்தான்' எனப் பாங்கி உணர்ந்தது.

'இவரது கட்டுரை (பேச்சு) இவர் இழந்த பொருள் முதலில் யானையாய் இருந்து, பின்பு மானாகி, அதன்பின்பு மகளிர் உடுத்தும் சந்தனத் தழையை வழங்குவதாகி முடிவில் தலைவியது கொங்கைகளாய், முடிவில் அவளது அல்குலாய்விட்டது என்க. முதலில் இவர், 'இவ் வழியாக அம்பு பட்ட ஓர் யானை வந்ததா' என்றார்; அடுத்து 'மான் வந்ததா என்றார்; அடுத்து எதையும் தேடுவதை விடுத்து, 'இத்தழை உங்கட்கு ஆகுமோ என்றார். பின்பு அப்படியும், இப்படியும் போய்த் தலைவியை முன்னும், பின்னும் நோக்கி நிற்கின்றார்; (நன்கு தெரிகின்றது இவரது எண்ணம்) - என்பதாம். கைக் குன்றம், யானை. கலை - மான். தழை - மகளிர் உடையின் மேல் அழகாகக் கட்டிக் கொள்ளுதற்குப் பூவும், பச்சிலையும் விரவத் தொடுத்து ஆக்கும் ஓர் உடைச் சிறப்பு.