பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை856

1238.கட்டது வேகொண்டு கள்ளுண்டு, நுங்கைக ளாற்துணங்கை
இட்டது வேயன்றி, யெட்டனைத் தானிவ ளுள்ளுறுநோய்
விட்டது வே?யன்றி வெங்குரு நாதன்றன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின், பேதை மகிழ்வுறவே.

57

1239.உறவும், பொருளுமொண் போகமுங் கல்வியுங் கல்வியுற்ற
துறவும், துறவிப் பயனு மெனக்குச் சுழிந்தபுனல்
புறவும், பொழிலும் பொழில்சூழ் பொதும்புந் ததும்பும்வண்டின்
நறவும், பொழிலெழிற் காழியர் கோன்திரு நாமங்களே.

58

 

இதனைத் தலைவன் 'தலைவிக்கு' எனக் கொணர்ந்து, பெறும்படி பாங்கியை வேண்டுதல் ஒரு முறை.

1238. குறிப்புரை: இப்பாட்டு, தலைவியது வேறுபாடு கண்டு தாயர் வேலனை வினாவி வெறியாட்டெடுக்கத் தோழி அதற்கு உடன்படாள் என்பது பற்றிச் செவிலிக்குப் பட்டாங் குரைத்து வெறிவிலக்கி அறத்தொடு நின்றது.

கட்டதுவே கொண்டு - குறிகேட்டுப் பார்த்து, அது, பகுதிப் பொருள் விகுதி. சிறிது நெல்லை அள்ளி முறத்தில் இட்டு, இரண்டிரண்டாக எடுத்து வைத்துக் குறிபார்ப்பதை, 'கட்டு' என்றும், அப்படிப் பார்க்கும் குறத்தியை, 'கட்டுவிச்சி' என்றலும் பழைய வழக்கங்கள். அங்ஙனம் குறிபார்த்து, 'தலைவியது வேறுபாடு தெய்வத்தான் ஆயது' எனக் கொண்டு மனைக்குள் வெறியாட்டு எடுக்கப்பட்டது. வெறி - செம் மறியாடு. அதனைப் பலியிட்டுக் கொண்டாடுவது வெறியாட்டு. துணங்கை - இரு கைகளாலும் விலாக்களைப் புடைத்து ஆடும் ஒருவகைக் கூத்து, வேலனைச் சார்ந்தவர்கள் ஆடிய இக்கூத்தை அதனைச் செய்வித்தோர் ஆடியதாக அவர்மேல் ஏற்றிக் கூறினாள், இகழ்ச்சி தோன்றுதற் பொருட்டு, 'சுணங்கை' என்பது பாடமன்று. "நீங்கள் துணங்கை யாடியதைத் தவிர, இவளது நோய் நீங்கிற்றோ" - என்றாள். அன்றி - "இதை விடுத்து, இவள் மகிழ்வுற, வெங்குரு நாதன்றன் தார் கொண்டு சூட்டு மின்" என முடிக்க. ஐந்திணைகளிலன்றி கைக்கிளைக்கும் தலைவி ஆற்றாமை பற்றி வரும் இன்னோரன்ன சில துறைகள் பொதுவாம் என்க. வெங்குரு - சீகாழி. மட்டு அவிழ் - தேனோடு மலர்கின்ற சினைக்குரிய இவ்வினை முதல்மேல் ஏற்றப்பட்டது. தார் - மாலை. பேதை, தலைவி.

1239. குறிப்புரை: 'காழியர் கோன் திரு நாமங்களே எனக்கு, உறவு, பொருள் முதலிய அனைத்தும்' என்பதாம். 'கல்வியால் உற்ற' என மூன்றாவது விரிக்க. "துறவி" என்பதும் 'பிறவி' என்பதுபோலத் தொழிற்பெயர். இப்பொருட்கு 'வி' விகுதி. துறந்தவனைக் குறிக்குமிடத்தில் வகர ஒற்றுப் பெயர் இடைநிலையும், இகரம் விகுதியுமாகும். புறவு, முல்லை நிலம், "பொழில்" என்றது, முல்லை