பக்கம் எண் :

857ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1240.நாமுகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி யிடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவம் முகையரும்பக்
காமுகம் பூமுகங் காட்டிநின் றார்த்தன காரினமே.

59

1241.கார்அங்(கு) அணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச்
சீர்அங்(கு) அணைநற் பெருமணந் தன்னில் சிவபுரத்து,
வார்அங்(கு) அணைகொங்கை மாதொடும் புக்குறும் போது,வந்தார்
ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல் லால்,அவ் அரும்பதமே.

60

 

நிலத்துச் சிறுகாடுகளை, அவைகளால் சூழப்பட்ட பொதும்பு, நகர்ப்புறச் சோலை. ததும்புதல், இங்கே மிகுதியாக மொய்த்தல். வண்டின் - வண்டுக் கூட்டத்தில். நறவு - தேன். "நறவும்" என்னும் உம்மை, 'வண்டுக் கூட்டங்களேயன்றி, அவற்றிடையே நறவும் பொழிகினற் காழி' என இறந்தது தழுவிய எச்சம்.

1240. குறிப்புரை: இப்பாட்டு, தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் பிரிந்த காலத்துக் கார்ப் பருவங் கண்டு தலைவி இரங்கியது.

'நாம், ஞானசம்பந்தனை நண்ணலர் போல் எம் உகக் கார் இனம் சரம் சிந்தி இஞ்சியை இடிக்கவும், தோன்றிகள் தீமுகம் தோன்றவும், தளவம் முகை அரும்பவும் கா முகத்தில் பூ முகத்தைக் காட்டி நின்று ஆர்த்தன' எனக் கூட்டி யுரைக்க. 'ஏரம்' என்பது, 'ஏம்' எனக் குறைந்து நின்றது. ஏமம் - பாது காவல். உக - கெடும்படி. சரம் - சரமாரி போலும் மழை மாரி. இஞ்சி - மதில். இடி படுத்தல் - இடியை வீழ்த்தும் முகத்தால் இடிபாட்டினை உண்டாக்குதல். தோன்றி - தோன்றிச் செடி. இவற்றின் பூ சிவப்பாய் இருக்கும் "தோன்ற" எனச் சினைவினை முதல்மேல் நின்றது. தளவம் - முல்லைக் கொடி. கா முகம் - சோலைகளின். பூ முகம் காட்டுதல் - பூப் பூக்கச் செய்தல். தோன்றி பூத்தல் முதலியவை கார் காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகள். கார் காலம் வந்து நாள் பல ஆயினமையை இவை குறிக்கும். 'தலைவன் இன்னும் வந்திலர்' என்பது குறிப்பெச்சம்.

1241. குறிப்புரை: 'கவுணியர் தீபன், நல்லூர் பெருமணந் தன்னில் மாதொடும் சிவபுரத்துப் புக்குறும் போது, வந்தார் அவ் அரும்பதம் பெற்றதல்லால், ஆர் அங்கு ஒழிந்தனர்' - எனக் கூட்டி யுரைக்க.