பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை858

1242.அரும்பத மாக்கு மடியரொ(டு) அஞ்சலித் தார்க்கரிய
பெரும்பத மெய்தலுற் றீர்!வந் திறைஞ்சுமின், பேரரவம்
வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தனென் னானைதன் தாளிணையே.

61

1243.தாளின் சரணந் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே புகுந்திடும், கெண்டைகளும்,
வாளுந் தொலைய மதர்த்திரு காதி னளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே.

62


1242. குறிப்புரை: அரும் பதம் - அரிய சொல். என்றது துதிமொழியை அவைகளை ஆக்குதல், துதித்தல். எனவே, 'துதி செய்யும் அடியரொடு, அஞ்சலி செய்தார்க்கும் அடைதற் கரிய பெரும்பதம்' - என்றவாறாம். பெரும்பதம் - வீடு பேறு. 'பெரும்பதம் எய்தலுற்றீர்! வந்து என் ஆனைதன் தாளிணையே. இறைஞ்சுமின்' - என இயைத்து முடிக்க. பேர் அரவம் வரும் பதம் - பெரிய ஆரவாரம் எழுகின்ற இடம். 'பதமாகிய காழி' என்க. "பை அரவு அல்குல்"1 என்பதில், 'அரவப் பை' - என்பது 'பை யரவு' எனப் பின் முன்னாகி நின்றது போல, 'கமல மலர்' என்பது பின் முன்னாக மாறி, "மலர்க் கமலம்" என நின்றது; இலக்கணப் போலி மொழி. 'பத சம்பந்தன்' என இயையும். "என் ஆனை" என்பது காதற் சொல். ஏகாரம், பிரிநிலை. 'வேறு முயலல் வேண்டா' என்பதாம்.

1243. குறிப்புரை: "கெண்டைகளும்" என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.

இப்பாட்டு, 'பாங்கன் நீ இன்னையாதற்குக் காரணம் என்னை' வினாயதற்குத் தலைவன் உற்றது உரைத்தது.

சரணம் - அடைக்கலம். தரியலர் - பகைவர். 'தரியலர் போல் மலங்க' என்க. மலங்குதல் - தலங்குதல்; "மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி"2 - என்பது காண்க. கீளுதல் - கிழித்தல்; உள்ளத்தைக் கிழித்தல். 'கீளுதலால் மலங்க' என்பதாம். விலங்கே - குறுக்கே. (யான்) 'கீளின் மலங்க, கருங் கண்ணி வைத்த மென்னகை விலங்கே புகுந்திடும்' என இயைத்துக் கொள்க. தொலைய - தோற்க. மதர்த்தல் - களித்தல். மின் - ஒளி. புரியா - புரிந்து; வெளிப்படுத்தி.


1. திருமுறை - 3.120.5.
2. திருவாசகம் - திருக்கழுக்குன்றப் பதிகம் - 3.