| 1244. | நகுகின்ற முல்லைநண் ணாரெரி கண்டத்(து) அவர்கவர்ந்த மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை; விரவலரூர் புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றி; புறவமன்கைத் தகுகின்ற கோடல்கள்; அன்பரின் றெய்துவர் கார்மயிலே. | | 63 | | 1245. | மயிலேந் தியவள்ளல் தன்னை யளிப்ப மதிபுணர்ந்த எயிலேந் தியசண்பை நாத னுலகத்(து) எதிர்பவர்யார்? குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பி னம்புதழீஇ அயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே. | | 64 |
1244. குறிப்புரை: இப்பாட்டு, தோழி தலைவியைப் பருவம் காட்டி வற்புறுத்தியது. 'கார் மயிலே! முல்லை நகுகின்ற; கொன்றை நிதி காட்டின; தோன்றி தீயெனப் பூத்தன; கோடல்கள் கைத் தகுகின்ற; அன்பர் இன்று எய்துவர்' என இயைத்து முடிக்க. 'கார் காலம் வந்துவிட்டது; ஆகவே அவர் வந்துவிடுவார்' - என்பதாம். "நகுகின்ற, தகுகின்ற" என்பன, அன் பெறா அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினைமுற்றுக்கள். நண்ணார் - பகைவர். கண்டம் - நாடு. 'நண்ணார் நாடு' என்க. 'அது நம் அரசனைப் பகைத்தமையால் தீப்பற்றி எரிவதாயிற்று' - என்பதாம். செய்யுளாகலின், பின்வரும் அன்பரைச் சுட்டும். 'அவர்' என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது. நிதி, பொன் 'கொன்றை பொன் காட்டின' - என்பதாம். விரவலர் ஊர், மேற்குறித்தவர்களது ஊர்கள். தோன்றி - தோன்றிச் செடி. புறவ மன் - முல்லை நிலமாகிய அரசன். கோடல்கள் - காந்தட் பூக்கள். 'அவை அரசன் கைகளைப் போலத் தோன்றுகின்றன என்பதாம். இவையெல்லாம் கார் கால நிகழ்ச்சிகள். கார் மயில் - கார் காலத்தில் ஆடும் மயில். மயிலே - மயில்போன்றவளே! உவமை யாகுபெயர். 1245. குறிப்புரை: (இப்பாட்டிற்கு இரண்டு வகையாகப் பொருள் சொல்லப்படுகின்றது. முதலாவது பொருள், ஞானசம்பந்தரை முருகன் அவதாரமாகக் குறிப்பது. இரண்டாவது பொருள், அவ்வாறன்றிப் பொதுவாய் நிற்பது.) முதலாவது உரையில் "மயில் ஏந்திய வள்ளல்" - என்பதைப் பின் வருகின்ற "தன்" என்பதனோடு இயைக்காமல், "அளிப்ப" என்பதன்பின் 'வந்து' என ஒரு சொல் வருவித்து, 'வந்து மதி புணர்ந்த சண்பை நாதன்' என இயைத்து, "மதி புணர்ந்த - ஞானத்தைப் பெற்ற" எனப் பொருள் உரைக்கப்படும். இனி, 'முருகனைப் புதிதாக ஞானம் பெற்றதாக உரைத்தல் சிறப்பன்று' எனக் கொண்டு, மதியைச் சந்திரனாக்கி, 'சந்திரன் தவழ்கின்ற எயில்' என எயிலுக்கு அடையாக்கியும் உரைக்கப்படும் இதில் 'வந்து' என்பது உருவிக்கப்படாமல் 'வந்த' என்பது வருவிக்கப்படும்.
|