மயில் ஏந்திய வள்ளல் - மயிலால் தாங்கப்பட்ட வள்ளல்; முருகன், ஐ - தந்தை. முதல் உரையிற் கொள்ளும் பொருள், ஒரு சொல்லை வருவித்தல், "மதி புணர்ந்த" என்பதை வெறும் ஓர் அடை மொழியாக்குதல் ஆகிய இடப்பாடுகள் உள்ளன. இரண்டாவது உரையில், "மயிலேந்திய வள்ளல் தன் ஐ" என்பது நேரே ஒரு தொடராகி, 'சிவ பெருமான்' எனப் பொருள் தந்து, அவன் அளிப்ப ஞானம் பெற்ற சண்பை நாதன்' என நேரே சென்று எளிதில் விளங்குகின்றது. முதலிற் கண்டவாறு உரை செய்கின்றவர்கள், 'ஞான சம்பந்தரை முருகன் அவதராமாக நம்பியாண்டார் நம்பிகள் சொல்லியிருப்பதைச் சேக்கிழார் சொல்லவில்லை' என்பர். 'ஞான சம்பந்தர் முருகன் அவதாரமே' என ஒட்டக் கூத்தர் தமது தக்க யாகப் பரணியில் மிக வலியுறுத்திக் கூறினார். பிற்காலத்திலும் அருணகிரி நாதர், திருப்போரூர்ச் சிதம்பரசுவாமிகள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர். துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அவ்வாறு எங்கும் கூறவில்லை. இவை யெல்லாம் இப்பாட்டில் "சண்பை நாதன்" என்னும் அளவில் நிற்பன. பின் உள்ளவை அகப் பொருள் துறையில் தலைவனைப் பகற்குறி விலக்கி, இரவுக்குறி நேரும் தோழி, அதற்குத் தலைவியை உடன்படுவித்தது. கொங்கு - தேன் 'கொம்பு போலும் அம்பு' என்க. 'கொடிய அம்பினைப் பூங்கொம்பு போலக் கொள்பவன்' எனத் தலைவனது ஆண்மையைக் குறிக்க இவ்வாறு கூறினாள். அயில் ஏந்திய மலர்; வேல்போலத் தோன்றும் மலர்கள், இவை கரும்பின் பூக்கள். தோடுகொள் வேலின் தோற்றம் போல ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்1 என்றது காண்க. 'கரும்பினது வேல்போலும் பூக்களைக் கண்டுளனாய் வந்த அண்ணல்' என்றது 'எதிர்ப்பவர் வேல்களையும் பூக்கள்போல் எண்ணி அழிப்பவன்' என்னும் குறிப்பினைத் தோற்றுவித்தது. 'அண்ணலுக்கு' என்னும் நான்கனுருபை இரண்டனுருபாகத் திரித்து அதனை, "எதிர்ப்பவர் யார்" என்பதனோடு முடிக்க. 'எதிர்பவர்' எனப் பாடம் ஓதலும் ஆம். நம் அண்ணலைத் தகைவார் ஒருவர் இல்லை; 'அதனால் நீ இரவுக்குறியை விலக்கல் வேண்டா' என்பதாம். இனி இதனை, ஒருவழித் தணந்த தலைமகன் வரவு நீட்டிப்ப, 'அவற்கு ஏதம் விளைந்தது கொல்லோ' என நினைந்து கவன்ற தலைவியைத் தோழி, 'இஃது ஆகாது' என ஆற்றுவித்ததாகக் கொள்ளலும் ஆம்.
1. புறம் - 35.
|