| அடியெடுத்திட் டுதைத்துவைது கட்டிமணி | | வாய்க்கவ்வி யயிற்க ணோக்கிப் | | பொடிமதுப்பல் வளம்பறிக்கப் படுங்குடைந்து | | மாசுறுத்தப் புலம்பு மன்றே. |
(இ - ள்.) அகன்ற வயலுமிக்க கடுந்தன்மை யுடையன (விலக்கப் படுவன) சோலைகளுமிகக் கடுந்தன்மை யுடையன (விலக்கப்படுவன) தடாகங்களும் மிக்க கடுந்தன்மை யுடையன (விலக்கப்படுவன) இவைகள் முறையாக உழுதலைச்செய்து கலக்கி வருத்தக் கலங்காநிற்கும். பெண்கள் அடிகளை யெடுத்துதைத்தலாலும், வைதலாலும், தழுவுதலாலும், அழகிய வாயாற் கவ்வுதலாலும், வேற்படை போன்ற கண்ணாற் பார்த்தலாலும் உளவாகிய தேன் முதலாகிய பலவளங்களும் பறிக்கப்படும். மூழ்கி அழுக்கைப் போக்க ஒலிக்கும் என்க. (வி - ம்.) அகன்ற வயலும் கடியன என்பதற்கு - உழுது கலக்கிப் புண்படுத்தக் கலங்கி நெல் முதலிய பயனை வலிதிற் கலக்கமுற் றளித்தலால் கடுந்தன்மை யுடையன எனச் செம்பொருளாகக் கொள்க. வயல் உழுது உழக்கிப் புண்படுத்தக் கலக்கமுற்று வருந்தலின் கலக்க முறு மதனிடத்துள்ள பொருளை யுண்டுயிர் வாழ்தல் அறிவுடையார்க் கழகன் றாதலின் கடியன வென்பதற்கு நீக்கப்படுவன எனச் சிலேடைப் பொருள் கொள்க. தண்டலை கடியன என்பதற்கு, பெண்கள் உதைத்தல், நிந்தித்தல், கட்டியணைத்தல், வாயாற் கவ்வல், கண்ணால் நோக்கல் ஆகிய துன்பஞ் செய்யப் பூத்துத் தேன் பழ முதலிய பலனைத் தருதலாற் கடுந் தன்மையை யுடையன வெனச் செம்பொருளாகக் கொள்க. சோலை தன்பாலுள்ள பொருள்களை வல்லவரூன்ற வடியாப்போல் உவகையின்றி யளித்தலின் அதனை யேற்றுண்ணல் அறிவுடையார்க் கழகன்றாதலின் 'கடியன' என்பதற்கு விலக்கப்படுவன எனச் சிலேடைப் பொருள் கொள்க. தடாகம் கடியன என்பதற்கு, பிறர்மாட்டுள்ள மாசை நீக்குந் தன்மை இயல்பாக அமைந்திருந்தும் அதனை நீக்குங் குணமின்றி வாளா விருப்ப, மூழ்குவோர் அசுத்தங்களைச் சேர்க்க அதனையேற் றோலமிடுதலின் கடுந்தன்மை யுடையன எனச் செம்பொருள் கொள்க. தடாகங்கள் அசுத்தங்களைத் தன்னுட்கொண்டு அரவஞ் செய்தலின் அசுத்த முடையாரை அணுகல் அறிவுடையார்க் கழகன் றாதலின் "கடியன" என்பதற்கு விலக்கப்படுவன எனச் சிலேடைப் பொருள் கொள்க. பெண்கள் உதைக்க அசோகமும், நிந்திக்கப் பாடலமும், சுவைக்க மகிழும், பார்க்க மாவும் மலருமென்க. இதனை "ஏடவிழ் மகிழ் சுவைக்க" என்னும் நிகண்டுச் செய்யுளா னறிக. ஈண்டு வள மென்றது பூ கனி முதலாயின. குடைந்து மாசுறுத்தப் புலம்புதலாவது மூழ்கி யழுக்கைச் சேர்க்க ஒலி செய்தல். (17) | பூத்திருந்தும் புனற்றடங்கள் யாவரையுந் | | தோய்ந்துபுகழ்ப் பொருளு மாக்கும் |
|