ஆங்கே செயல்" என்னும் திருக்குறளா னறிக. குழமதி முழுமதி - அர்த்த சந்திரன் பூரண சந்திரன். என - என்று சொல்லும்படி. பொற்கலை - பீதாம்பரம். கடிதடம் - நிதம்பம். குறி - ஆண்டுச் செய்யும் நகக்குறி. பொறித்தன - ஈண்டுப் பதித்தன வென்க. (23) | கட்டும் வாரினர் கழலினர் காளையர் கதித்து | | முட்டும் வேல்சிலை நாந்தக முழுதுங்கல் லூரிக் | | கொட்டில் வாய்ப்பயில் வாரது குறித்தனர் நோக்க | | வட்ட வான்பயில் விஞ்சையர் மனத்துளும் பயில்வார். |
(இ - ள்.) கட்டப்பெற்ற கச்சினை யுடையரும் வீரக் கழலினை யுடையருமாகிய காளையர் எழுந்து, பாயும் வேலும், வில்லும் வாளுமாகிய எல்லாப் படைக்கலங்களையும் கலைபயிலிடத்தில் பயிற்சி செய்வார்கள். அங்ஙனம் பயிறலை (வித்தியாதரர்) கருதி நோக்குதலால் வட்டமாகிய ஆகாயத்தில் இயங்குகின்ற அவ்வித்தியாதரர் மனத்துள்ளும் தங்குவார். (வி - ம்.) வாரினராகிய கழலினரென முற்றெச்ச மாக்குக. கதித்து - எழுந்து. முட்டும் வேல் - பகைவர் மார்பிற் பாயும் வேல். நாந்தகம் - வாள். கல்லூரிக் கொட்டில் - கலைபயிலிடம். அது - அப்பயிறல். குறித்தனர் - குறித்து; முற்றெச்சம். நோக்க - நோக்கலால்; செயவெ னெச்சம் காரணப் பொருளில் வந்தது. விஞ்சையர் - தேவரிலொரு பகுதியார். மனத்துளும் என்ற உம்மை இறந்தது தழீஇயது. மனத்துட் பயிறல் - விஞ்சையர் இவர் கல்வி நலன்களைக் கண்ணுற்று அழுக்காறு கொண் டெப்பொழுதும் அவர்கள் ஆக்க முதலியவற்றைச் சிந்தித்துக் கொண்டிருத்தலின் இந் நகரத்துக் குமரர்கள் அவ்விஞ்சையர் மனத்துட் டங்குவா ரென்க. முன்னுள்ள பயிறல் - பழகல். (24) | புரவி போம்வழி பொற்குலாஞ் சங்கிலிப் படலை | | கரிகள் போம்வழி கதிர்ப்பணி யடுக்கிவீழ் காழ்கள் | | இரத மூர்வழி யிணர்மலர்த் தொடைத்திரண் மாந்தர் | | பரவு நீள்வழி பங்கயத் தாமமா நகர்க்கே. |
(இ - ள்.) இந் நகரமாகிய பெண்களுக்குக் குதிரைகள் செல்கின்ற வழி பொன்னாற் செய்யப்பட்டு விளங்குகின்ற சங்கிலிமாலையாம். யானைகள் செல்லும்வழி பிரகாசம் பொருந்திய ஆபரணங்களில் அடுக்கி நிறைக்கப் பெற்றுக் கீழே தொங்குகின்ற மணிவடங்களாம். இரதங்கள் செல்கின்றவழி கொத்துக்களோடு கூடிய மலர்களாற் றொடுக்கப்பட்ட மாலையின் கூட்டங்களாம். மாந்தர் பரந்து செல்கின்ற நீண்டவழி தாமரைப்பூ மாலையாகும். (வி - ம்.) இந் நகரமாகிய பெண் மகளுக்கு வழி நான்கும் சங்கிலியும், மணிவடமும், மலர் மாலையும், தாமரை மாலையும் ஆகுமென்க. வழிகளில் அடிச்சுவடு முறையாகத் தொடர்ந்து பதிந்திருத்தலின். சங்கிலிப் படலையாகவும், காழ்களாகவும், தொடையாகவும் பங்கயத் தாமமாகவும் உருவகம் செய்யப்பட்டன. (25) |