கொருவர் தலை வணக்கம் செய்தல் போலத் தலையை வணக்கஞ் செய்வனவாம். (வி - ம்.) இடத்துநீங்கல், தாய்நடத்தல், அடுத்தல் குதிரைக்கும் அலைக்கும் ஒப்பக் கொள்க. அடுத்தபோது - கரையைச் சமீபித்தபோது. பணிப்பன - தலையை வணக்குவன. (28) | ஒற்றை யஞ்சகட் டிரதமு மொன்றலா தில்லாக் | | கற்றை யங்கதிர்ப் பரிதித னுலகினைக் காய்வான் | | உற்ற தொத்தன வுருள்பல பூண்டபஃ றேர்கள் | | முற்ற வுள்ளுறீஇ முகில்கிழித் தெழுந்ததேர் நிலைகள். |
(இ - ள்.) அழகிய ஒற்றைச் சக்கரத்தை யுடைய இரதமும் ஒன்றே யல்லது பிறிதில்லாத கூட்டமாகிய அழகிய கிரணங்களையுடைய சூரியனது உலகத்தை யழிக்கும் பொருட்டுப், பல சக்கரங்களைத் தம்மிடத்துக் கொண்ட பல இரதங்களை யெல்லாம் தம்மிடத்து அடக்கி மேக மண்டலத்தைக் கிழித்து எழுந்த தேர் நிலைகள் பொருந்தியதை ஒத்தன. (வி - ம்.) உலகு - சூரிய மண்டலம். முற்ற உள்ளுறீஇ - முழுதும் உள்ளடக்கி. முகில் - மேக மண்டலம். தேர்நிலை - தேர் நிற்குமிடங்கள். (29) | கண்ணி றந்திவை போலடுங் கடன்வலாச் சமழ்ப்பால் | | வெண்ணி றம்படை களிறுமொன் றல்லது மேவாப் | | புண்ணி றம்படப் பொருமர சுலகடப் பொலிந்தாங் | | கெண்ணி றந்தவுட் டளைத்தெழுந் தனவிபக் கூடம். |
(இ - ள்.) கண் வேகத்தைக் கடந்து (இந் நகரத்து) யானைகளைப் போலப் (பகைவர்களைக்) கொல்கின்ற முறைமையில் வன்மையில்லாத நாணத்தால் வெண்மை நிறம் படைத்த அயிராவத மென்னும் யானையொன்றல்லது வேறு யானைகளைப் பொருந்தப் பெறாத புண்ணானது மார்பிற் பொருந்தப் (பகைவருடன்) போர் செய்கின்ற இந்திர னுலகத்தைப் பாழ்படுத்தப் பொலிந்ததைப் போல அளவிறந்தனவாகிய யானைகளை யுள்ளே தடுத்து யானைக் கூட்டங்கள் எழுந்தன. (வி - ம்.) கண்ணிறந்து - கண் வேகத்தையும் கடந்து. கண்ணோட்டங் கெட்டு இவைகள் போலடுங் கடனெனக் கொள்ளினும் பொருந்தும். இவை - இந்நகரத்துள்ள யானைகள். கடன் - முறை. வலா - வல்லமை யில்லாத; இடையு மிறுதியும் தொக்க எதிர்மறைப் பெயரெச்சம். "நிறம் புண்படப் பொருமரசு" எனக் கூட்டுக. நிறம் - மார்பு. "குருநிறத் திழிதோற்றம்" என்னும் காஞ்சிப் புராணத்தா னறிக. எண்ணிறந்த - எண்ணிறந்தனவாகிய யானைகள். வினையாலணையும் பெயர். (30) | சுந்த ரந்தமக் கீட்டிய துரகதப் பிறவி | | வந்த நாளிது வாலென மகிழ்ந்துமீப் பரித்தாங் |
|