பக்கம் எண் :

112தணிகைப் புராணம்

(வி - ம்.) வார்தல் - ஒழுகல்; ஈண்டு தாழ்தல். இழையார்ந் துளார் - அணிகலன்கள் நிறையப் பெற்ற பெண்கள். சார்ந்த மாதர் - ஊசலிற் பொருந்தி யுள்ளாராகிய பெண்கள்.

(39)

 ஆட லம்மனை யவ்வளைத் தோளியர்
 பாட லம்பசுந் தேன்பெருக் குந்தொறும்
 கோடமன்ற குழைத்தலைப் பொங்கரும்
 பீட மன்றபைந் தேறல்பெ ருக்குமே.

(இ - ள்.) அம்மனை யாடுகின்ற அழகிய வளையணிந்த தோள்களையுடைய அந்நகரத்துப் பெண்கள் இசைப் பாட்டாகிய அழகிய தேனைப் பெருக்குந் தோறும் கிளைகள் நெருங்கிய தளிர்த்தலை யுடைய சோலைகள் பெருமை பொருந்திய பசிய தேனைப் பெருக்கும்.

(வி - ம்.) பாடலாகிய தேன். அம்மனை யாடல்தோளிய ரென மாற்றுக. அமன்ற - நெருங்கிய. சோலையானது பெண்கள் பாட மலரு மரம் உடைத்தாதலான் தேறல் பெருக்கு மென்றார். குழைத்த - தளிர்த்த. பொங்கர் - சோலை. இசைத் தேன் பெருக்கு மங்கையர்க்கு மலர்த் தேன் பெருக்கி வழங்கும் சோலைகள் என்க.

(40)

 பொன்ன னார்புகுந் தாடவி ரிந்துபோம்
 அன்ன மீட்டு மணைந்தன வேற்றுமை
 மன்ன லாற்றம வாழ்க்கைம லர்க்கயம்
 இன்ன வென்றறி யாவிடர் மூழ்குமே.

(இ - ள்.) இலக்குமி யொத்த (அந்நகரத்துப்) பெண்கள் சென்று மூழ்க (கயத்தினின்றும்) ஓடிப்போன அன்னப் பறவைகள் மறுபடியு மாண்டணைந் தனவாகித் தம்முடை யிருப்பிடமாகிய மலர்களை யுடைய தடாகங்கள் (தம்மியல்பினின்றும்) வேறுபாட்டைப் பொருந்தலால் யாம் வாழ்வது எத்தன்மை யுடையதென் றறியாமல் துன்பமாகிய கடலுண் மூழ்கும்.

(வி - ம்.) வேற்றுமை மன்னல் - (சந்தனம், கத்தூரி, பொற் சுண்ண முதலியவற்றாலும் மலர்கள் சிதைதல் முதலியவற்றாலும்) வேறுபா டடைதல். "இன்னவென்றறியா" என்புழி முற்றிறுதியு மெச்ச விறுதியுந் தொக்கன.

(41)

 எக்கர் மீதுமி ழைத்தபொற் குன்றினும்
 நக்க தேனலர் நங்கையர் சூடுவான்
 தொக்கி ருப்பன தொல்வரைக் கோட்டகம்
 புக்கு மஞ்ஞைதி ரண்டன போன்றன.

(இ - ள்.) மணற்குன்றுகளினும், பொன்னிறமுள்ள செய் குன்றுகளினும் அந் நகரத்துப் பெண்கள், விரிந்த தேனினையுடைய மலர்களைச் சூடும் பொருட்டுக் குழுமி யிருத்தலான் அவை பழமையான சிகரங்களின் மயிற் கூட்டங்கள் புகுந்து சேர்தலைப் போன்றன.