பக்கம் எண் :

126தணிகைப் புராணம்

 கொடிவரைத் தேத்து நீண்ட குளிர்மரங் கிடங்கு முற்றும்
 தொடியுறக் கிடந்த சாம்பூ நதமெனுந் தொல்லை யாறு.

(இ - ள்.) இடர் நீங்கிய மதிலின் நாற்புறத்திலு மெழுந்துள்ள கோபுரங்கள் மேருமலைக் கடைகல்லா யடுத்த பெருமை பொருந்திய நான்கு மலைகளும் தம் மெல்லையினின்று நீங்கி உயர்ந்திருந்தனவாகும். அம் மதிலின்கண் ணுள்ள கொடிகள் வரையிடத்து நீண்டுயர்ந்துள்ள குளிர்ச்சியைத் தருகின்ற மரங்களாகும். அகழியானது முழுதும் வளைந்து கிடந்த சாம்பூநத மென்கின்ற பழமையாகிய
ஆறாகும்.

(வி - ம்.) தடவரை நான்கு - மேருக் கடைகல்லா யிருந்த நான்கு மலை யென்க. அவை நான்கும் உகந்திருந்தன வாகு மெனவும் ஆங்குக் கொடி மரமாகு மெனவும், கிடங்கு நதியாகு மெனவும் முடிக்க. ஆங்குக் கொடி - மதிலுள்ள கொடி. வரைத்தேத்து - வரையிடம். தொடி - வளைவு. மேருமலையின் ஒருபுறத் தோடுகின்ற சாம்பூநதமானது ஈண்டு நாற்புறத்திலும் சூழ்ந்தாற் போலிருக்கின்ற தென்க.

(69)

 நவமணி குயிற்றி யிட்ட நான்குகோ புரமும் விண்ணிற்
 சிவபுரத் தெல்லை காறுஞ் சிவணுவோர் வணங்க நிற்கும்
 நிவமணிக் கிடங்கிற் றோற்று நீழலுங் கிழக்கி னெல்லைத்
 தவவள ருலகோர் யாருந் தாழ்ந்தெழப் பொலிந்து நிற்கும்.

(இ - ள்.) ஒன்பான் வகை மணிகளைப் பதித்துச் செய்த நான்கு கோபுரங்களும் (பூமியிலிருந்து சிவபுரத் தெல்லை வரையிற் பொருந்துகின்ற மக்கள் தேவர் முதலிய யாரும் வணங்கும் வண்ணம் நிற்கும்). ஒளி மேலோங்குகின்ற, முத்து முதலிய மணிகளையுடைய அகழியிற்றோன்றும் கோபுரங்களின் சாயைகளும் கீழுலகத்தி னெல்லையில் மிக வளருகின்ற உலகங்களிலுள்ள யாவரும் தாழ்ந்து வணங்கி யெழும்படி பொலிவுற்று நிற்கும்.

(வி - ம்.) நிழல் - கோபுரத்தின் நிழல். நிவத்தல் - மேலெழுதல்; ஈறு கெட்டது.

(70)

 கற்றையங் கதிர்கான் றெல்லி கடும்பக லாகச் செய்யும்
 பொற்றபன் மணிகால்யாத்த பொற்பினா லுலகமெல்லாம்
 தெற்றெனத் தம்பாற் காணத் திகழ்தலாற் செருச்செய் ஞாட்பின்
 வெற்றிவே லிறைவன் கொண்ட விச்சுவ ரூபம் போலும்.

(இ - ள்.) கூட்டமாகிய ஒளியைக் கக்கி இரவைப் பகலாகச் செய்கின்ற பொன்மயமாகிய மணிகளாற் பதித்த அழகினால் எல்லா வுலகங்களும் தன்னிடத்துக் காணும்படி விளங்குவதால் (அம்மதில்) போரினைச் செய்கின்ற களத்தில் வெற்றியை யுடைய வேற் படையினைத் தாங்கிய தலைவனாகிய முருகப்பெருமா னெடுத்த விச்சுவரூபத்தை யொக்கும்.

(வி - ம்.) எல்லி - இரவு. இனி எல்லி கடும் பகலாகச் செய்யுமென்பதற்கு - பகலை மிக்க பகலாகச் செய்யும் மணியெனப் பொருள் கொள்வாரு முளர். கால் யாத்தல் - ஈண்டுப் பதித்தல். `தெற்றென -