பக்கம் எண் :

திருநகரப் படலம்127

தெளிவாக. ஞாட்பு - ஆகு பெயர். விச்சுவரூபம் - உலகமே வடிவமாகத் தோன்றுதல். கோபுரமானது பொற்பி னேதுவாலே அவ்வாறு திகழ்தலாற்
போலுமென்க.

(71)

 மேனிலை மாடத் திட்ட விளக்குமிழ் தூமஞ் சென்று
 வானிமி ரண்டப் பித்தி வைகலு மாசு செய்ய
 வானிவர் கொடியின் வெண்டூ சையென நீவி நீவி
 நீனிறம் படைத்த வென்ப நெடியவ னுருவ மான.

(இ - ள்.) மேன் மாடங்களி லேற்றிய விளக்கு வெளியிட்ட புகையானது ஆகாயத்தி லெழுந்த அண்டச் சுவரினை நாடோறும் மாசாகச் செய்ய, அம் மாடங்களிற் கட்டுப்பட்டு மேலெழுந்துள்ள கொடிகளிலுள்ள வெள்ளிய சேலைகள் அழகாகத் தடவித் தடவி விண்டுவின் வடி வம்போல நீல நிறத்தைப் படைத்தன வென்று சொல்வார்கள்.

(வி - ம்.) ஆன் - அவ்விடம், ஐயென - அழகாக, நீவிநீவி - தடவித் தடவி.

(72)

 அண்டமா ரளவைக் கற்ப வடங்கின வன்றி வீறின்
 மண்டுநீர்க் கிடங்க ரண்ட மலிபுனற் பரப்போ டொன்றாம்
 மிண்டுபோர்ப் பொறியி னிஞ்சி விளங்குகோ புரங்க ளன்ன
 கொண்டவார் கொடிக ளெண்ணி லண்டமுங் குறுக நீளும்.

(இ - ள்.) நீர் நிறைந்த அகழி அண்ட மமைந்த அளவினுக் கியைய அமைவுற்றன அல்லாமல் பெருக்கெடுக்கின் பெரும்புறக் கடலினோ டொன்றாம். போர் செய்யு மியந்திரங்களை யுடைய மதிலும். அம்மதிற் றலையிலுள்ள கோபுரங்களும் (அண்டமா ரளவைக் கேற்ப அடங்கும்) அத்தன்மையினவே யாம். (அம்மதிலும் கோபுரமும் தன்னிடத்திற்) கொண்ட நீண்ட துகிற் கொடிகளும் (அண்டமா ரளவைக் கேற்ப அடங்கின அன்றி வீறி யெழுந்தால்) அளவிட வியலாத அண்டங்களும் வடிவாற் சிறியன என்று சொல்லும் வண்ணம் நீளும்.

(வி - ம்.) புனற் பரப்பு - பெரும்புறக் கடல். வீறின்-எழுந்தால். கிடங்கு புனற் பரப்போடொன்றா மெனவும், இஞ்சியும் கோபுரங்களும், அவை கொண்ட கொடிகளும் வீறி யெழின் அண்டங் குறுக நீளுமெனவும் வினை முடிவு செய்க. அன்ன - அண்டமா ரளவைக் கேற்ப அடங்குந் தன்மையன என்க.

(73)

 பாயின வகழி மாண்பும் பந்தொடு பாவை தூங்கும்
 வாயில்வண் புரிசை மாண்பும் வகுத்தன மற்று முந்தை
 ஆயின பொருளு மைந்த ரளித்துவந் தேவ லாற்ற
 மேயின பரத்தை மாதர் வியத்தகு சேரி
சொல்வாம்.

(இ - ள்.) பரவிய அகழியின் மாட்சியையும். பந்தினோடு பாவையும் தங்கும் வாயிலோடு கூடிய அழகமைந்த மதிலின் மாட்சியையும் வகுத்துச் சொல்லினாம். தாமீட்டிய செல்வத்தையும் முன்னேயுள்ள பொருள்களையும்