பக்கம் எண் :

160சித்தர் பாடல்கள்

 வலைபட்டு உழலுகின்ற மான்போல் பரதவித்துத்
தலைகெட்ட நூல் அதுபோல் தட்டழிந்தாய் நெஞ்சமே.
  
29.முடிக்குமயிர்ப் பொல்லா புழுக்குரம்பை மின்னாரின்
இடைக்கும் நடைக்கும் இதம் கொண்ட வார்த்தைசொல்லி
அடிக்கொண்ட தில்லைவனத்து ஐயனே! நாய் அனையேன்
விடக்கை இழந்த மிருகமது ஆனேனே!
  
30.பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
சீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே.
  
31.பத்தெட்டாய் ஈரைந்தாய்ப் பதின்மூன்று இரண்டொன்றாய்
ஒத்திட்டு நின்றதோர் ஓவியத்தைப் போற்றாமல்;
தெத்திட்டு நின்ற திரிகண்ணுக் குள்ளாக்கி
வித்திட்டாய் நெஞ்சே! விடவும் அறியாயே!
  
32.அஞ்சும் உருவாகி ஐம்முன்றும் எட்டும் ஒன்றாய்
மிஞ்சி இருந்த விளக்கொளியைப் போற்றாமல்
பஞ்சிலிடு வன்னியைப்போல் பற்றிப் பிடியாமல்
நஞ்சுண்ட கெண்டையைப்போல் நான் அலைந்து கெட்டேனே.
  
33.ஊனம் உடனே அடையும் புழுக்கட்டை
மானமுட னேசுமந்து மண்ணுலகில் மாளாமல்
ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருந்த தேசம்விட்டுப்
போனதுபோ லேநாம் போய்பிழைத்தோம் இல்லையே.
  
34.ஊறா இறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை,
நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை,
வீறாம் புறத்தை விரும்புகின்றது எப்படியென்
றாறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே.
  
35.அரிய அரிதேடி அறிய ஒரு முதலைப்
பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல்
கரியபெரு வாழ்வை நம்பிக் காமத்து அழுந்தியே
அரிவாயில் பட்ட கரியது போல் ஆனேனே!