பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்161


36.தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி,
மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
விந்துருகி நாதமாம் மேல் ஒளியைக் காணாமல்
அந்தரத்தே கோல் எறிந்த அந்தகன் போல் ஆனேனே.
  
37.விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதுபின்
சிலையார் கை வேடன் எச்சில் தின்றானைப் போற்றாமல்
அலைவாய் துரும்பதுபோல் ஆணவத்தினால் அழுங்கி,
உலைவாய் மெழுகதுபோல் உருகினையே நெஞ்சமே!
  




1.

பூரண மாலை

குறள் வெண்செந்துறை

மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே!

  
2.உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே!
  
3.நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே!
  
4.உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே!
  
5.விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே!
  
6.நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே!
  
7.நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே!
  
8.உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே!
  
9.மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே!