பக்கம் எண் :

162சித்தர் பாடல்கள்

10.இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே!
  
11.ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே!
  
12.மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்
பொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே!
  
13.பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே!
  
14.தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும்
உண்டென்று நம்பி உணர்வழிந்தேன் பூரணமே!
  
15.இந்த உடல் உயிரை எப்போதும்தான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே!
  
16.மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே!
  
17.சரியை கிரியா யோகம்தான் ஞானம் பாராமல்
பரிதிகண்ட மதியதுபோல பயன் அழிந்தேன் பூரணமே!
  
18.மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து
கண்கெட்ட மாடதுபோல் கலங்கினேன் பூரணமே!
  
19.தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாய்ப் பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே!
  
20.ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை
ஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே!
  
21.வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய்த்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே!
  
22.கருவிகள் தொண்ணூற்றாறில் கலந்து விளையாடினதை
இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே!
  
23.உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே!