பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்163


24.எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று
உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே!
  
25.எத்தனை தாய் தந்தை இவர்களிடதே இருந்து
பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே!
  
26.பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன்
பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே!
  
27.உற்றார் அழுது அலுத்தார், உறன் முறையார் சுட்டலுத்தார்;
பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் பூரணமே!
  
28.பிரமன் படைத்து அலுத்தான்; பிறந்து இறந்து நான் அலுத்தேன்;
உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே!
  
29.எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் செனித்துப்
புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே!
  
30.என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே!
  
31.கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே!
  
32.செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே!
  
33.எனக்குள்ளே நீ இருக்க, உனக்குள்ளே நான் இருக்க,
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே!
  
34.எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப்
பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே!
  
35.சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல்
வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே!
  
36.குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்
மலபாண்டத் துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே!