| 37. | அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே! |
| | |
| 38. | சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல் அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே! |
| | |
| 39. | ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல் நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே! |
| | |
| 40. | என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய், உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே! |
| | |
| 41. | நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே! |
| | |
| 42. | சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்த நலந்தனைத்தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே! |
| | |
| 43. | குருவாய், பரமாகிக் குடிலை, சத்தி நாதவிந்தாய், அருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே! |
| | |
| 44. | ஒளியாய்க் கதிர்மதியாய் உள் இருளாய் அக்கினியாய் வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே! |
| | |
| 45. | இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழு முனையாய் உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே! |
| | |
| 46. | மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே! |
| | |
| 47. | உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே! |
| | |
| 48. | தாயாகித் தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம் நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே! |
| | |
| 49. | விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக் குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே! |
| | |
| 50. | ஆணாகிப், பெண்ணாய், அலியாகி, வேற்றுருவாய், மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே! |