| 51. | வாலையாய்ப், பக்குவமாய், வளர்ந்து கிழம் தானாகி, பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே! |
| | |
| 52. | பொய்யாய்ப் புவியாய்ப், புகழ்வா ரிதியாகி மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே! |
| | |
| 53. | பூவாய் மணமாகிப், பொன்னாகி, மாற்றாகி, நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே! |
| | |
| 54. | முதலாய் நடுவாகி, முப்பொருளாய், மூன்றுலகாய், இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே! |
| | |
| 55. | ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த் தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே! |
| | |
| 56. | வித்தாய், மரமாய், விளைந்த கனியாய்ப், பூவாய்ச் சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே! |
| | |
| 57. | ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எல்லாம் தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே! |
| | |
| 58. | மனமாய்க் கனவாகி, மாய்கையாய், உள்ளிருந்து நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே! |
| | |
| 59. | சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச் சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே! |
| | |
| 60. | பொறியாய்ப், புலன் ஆகிப், பூதபேதப் பிரிவாய், அறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே! |
| | |
| 61. | வானில் கதிர்மதியாய் வளர்ந்துபின் ஒன்று ஆனதுபோல், ஊன் உடலுக் குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே! |
| | |
| 62. | பொய்யும் புலையும் மிகப் பொருந்திவீண் பேசலன்றி ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே! |
| | |
| 63. | நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப் பரம் அதுவே என்னப் பதம் அறியேன் பூரணமே! |
| | |
| 64. | கொல்வாய், பிறப்பிப்பாய்; கூட இருந்தே சுகிப்பாய்; செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே! |