பக்கம் எண் :

166சித்தர் பாடல்கள்

65.வாரிதியாய், வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எல்லாம்
சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே!
  
66.வித்தாய், மரமாய், வெளியாய், ஒளியாய் நீ
சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே!
  
67.தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே!
  
68.ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே!
  
69.நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும்
மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே!
  
70.மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய்
நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே!
  
71.உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க்
குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே!
  
72.சட்சமய பேதங்கள் தான்வகுத்துப், பின்னும்ஒரு
உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே!
  
73.முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடைத்து உள்ளிருந்த
செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே!
  
74.என்னதான் கற்றால்என்? எப்பொருளும் பெற்றால்என்?
உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே!
  
75.கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே!
  
76.வான்என்பார்; அண்டம்என்பார்; வாய்ஞான மேபேசித்
தான் என்பார் வீணர்; தனை அறியார் பூரணமே!
  
77.ஆதி என்பார்; அந்தம் என்பார்; அதற்குள்நடுவாய் இருந்த
சோதிஎன்பார்; நாதத் தொழில் அறியார்; பூரணமே!