பக்கம் எண் :

168சித்தர் பாடல்கள்

91.பூசையுடன் புவன போகம்எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே!
  
92.படைத்தும் அழித்திடுவாய்; பார்க்கில் பிரமாவெழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீ வியாய்த் துலங்குவிப்பாய்; பூரணமே!
  
93.மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
தந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே!
  
94.அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும்
சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன்; பூரணமே!
  
95.நரகம் சுவர்க்கம்என நண்ணும் இரண்டு உண்டாயும்
அரகரா என்பது அறிகிலேன்; பூரணமே!
  
96.பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன்; பூரணமே!
  
97.சாந்தம் என்றும், கோபம் என்றும், சாதிபேதங்கள் என்றும்
பாந்தம் என்றும், புத்தியென்றும் படைத்தனையே; பூரணமே!
  
98.பாசம் உடலாய்ப் பசு அதுவும் தான்உயிராய்
நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே, பூரணமே!
  
99.ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன்
பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே!
  
100.நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய்நீ பூரணமே!
  
101.முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேனே; பூரணமே!
  
102.பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய்; பூரணமே!
  


1.

நெஞ்சொடு மகிழ்தல்

அன்று முதல் இன்றளவும் ஆக்கையொடு சூட்சியுமாய்
நின்ற நிலை அறிய நேசமுற்றாய், நெஞ்சமே!