கடுவெளிச் சித்தரைப் போன்று இவரும் குயவனார் மண் தோண்டி விடுகதையைப் பாடுகின்றார். ‘ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம் வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’ இதில் மட்பாண்டம் செய்யும் மூலப்பொருள் கூறப்படுகிறது. இப்படி ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்துக் குருதிப்புனலிலே உண்டையாக்கி குயவனார் செய்த மட்பாண்டம் இறுதியில் பிச்சையெடுக்கும் திருவோடு அளவுக்குக்கூடப் பயனாவதில்லை என்று கூறுகின்றார். இரண்டு பேர் மண் சேர்த்துப் பிசைய ஒருவர் பானை செய்து அவரே பத்து மாதம் சூளையில் வைத்துப் பக்குவமாய் இறக்கி வைத்தாலும் அந்தப் பானையானது இறுதியில் அரைக்காசுக்குக்கூட உதவாது என்று இந்த உடல் நிலையாமையைக் கூறுகின்றார் பாம்பாட்டிச் சித்தர். ‘இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையா யிருப்பினு மந்தச்சூளை அரைக்காசுக் காகா தென் றாடாய்ப் பாம்பே’ மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று இந்தச் சித்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார். நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது. அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவ வினைகள் அவனை விட்டகலாது அவனைத் தண்டித்தே தீரும் என்பதை, |