“நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால் நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ ஊறுமுடல் பலநதி பாடிக் கொண்டதால் கொண்டமல நீங்கா தென்றா டாய் பாம்பே” என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே என்பது பாம்பாட்டியாரின் தீர்ப்பாகும். பொம்மலாட்டம் தெரியுமா? திரைக்குப் பின்னாலிருந்து சூத்திரதாரி ஒருவன் இயக்க, பாவைக் கூத்தாடும் நாடகக் காட்சியைப் போன்றது நமது வாழ்க்கை என்பதைப் பின் வரும் பாடலால் விளக்குகின்றார். “மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித் திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே” இன்னும் இந்த உடல் நிலையில்லாது என்பதை, “சீயும் மலமுஞ் செந்நீரும் நிணமும் சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடமதுஉடைந்தால் நாயும் நரியும் பேயும் கடுகும் நமதென்றே தின்னு மென்றடாய் பாம்பே” எவ்வளவு சீரும் சிறப்புமாய் வளர்த்த இந்த உடலானது உலகில் பார்க்கின்ற பொருளையெல்லாம் தனதென்றே சொந்தம் கொண்டாடும், சீழும் குருதியும் மலமும் சேர்ந்த இந்த நாற்றக்குடமான உடல் இறந்து விட்டால் நாயும், நரியும், பேயும், கழுகும் என்னுடையது இந்த உடல் என்று பங்கு போட்டுச் சாப்பிட ஆரம்பித்து விடும். இப்பொழுது சொல்லுங்கள், இந்த உடல் நம்முடையதா? அல்லது நாய் நரிகளுக்குச் சொந்தமானதா? என்று கேள்வி விடுக்கின்றார் பாம்பாட்டி. |