உதையாமல் என்னைஇப்போது உதைத்தவனும்கீழிறங்கி மதியான மூலமதில் வந்திருந்துக் கொண்டான்டி நிதியாம் மிரண்டெலும்பு நீளெலும்பிரண்டாகி முதியாத மாங்கிசமும் - என் ஆத்தாளே மூடி யதிலிருந்து. | 117 |
| | |
மாதவளைக் குள்ளேயடி வந்தவது கீழ்ப்படர்ந்து போதத்தின் முட்டியடி புகழ்நரம்பை உண்டுபண்ணி நீதம தாகவிந்த நீள்நிலத்தி லேதிரியப் பாதமாய் உன்னியடி - என் ஆத்தாளே பதியாய் வளர்ந்ததடி. | 118 |
| | |
இருகண்ணின் மேலேயடி இருந்தநரம் பூடுசென்று பெருநரம்பாய் விம்மிப் பெருக்க முளைத்ததடி தரிநரம்பும் ஈரெலும்பாய்த் தான்ஒன்பது எலும்பாய் விரிநரம்பு போலாக - என் ஆத்தாளே மேலாய் நுழைந்ததடி. | 119 |
| | |
இட்ட எழுத்திரண்டில் ஏங்கியதில் மேற்படர்ந்து எட்டமதி போலெலும்பு வளர்ந்து கவிந்ததடி எட்டிரண்டும் ஒன்றாகி இருந்தவர்க்கு வீடாச்சு வெட்டவெளி யானதடி - என் ஆத்தாளே மெய்யாய் இருந்துதடி. | 120 |
| | |
அகார உகாரத்தில் ஆசூனி யம்பிறந்து அகாரந் தனில்இரங்கி அரிமூலம் தன்னில்வந்து உகாரத்துள் ஆவேறி ஓடி உலாவுவதற்கு நிகரற்ற நாதனடி - என் ஆத்தாளே லிங்கமாய் வந்தான்டி. | 121 |
| | |
கருவாகி வந்தானோ கருவழிக்க வந்தானோ உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ திருவாகி வந்தானோ - என் ஆத்தாளே சீர்திருத்த வந்தானோ. | 122 |