பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்329


முத்தி தரும்வேத மொழியாம் புலம்பல்சொல்ல
அத்தி முகவன் தன் அருள்பெறுவதெக் காலம்.

1
  
ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம்.

2
  
நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே யிருந்து
தேங்காக்கருணை வெள்ளந் தேக்குவது மெக்காலம்.

3
  
தேங்காக் கருணைவெள்ளந் தேக்கியிருந் துண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம்.

4
  
ஓயாக் கவலையினா லுள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம்.

5
  
மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம்.

6
  
காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்தடுப்ப தெக்காலம்.

7
  
சேயாச் சமைந்து செவிடூமை போற்றிரிந்து
பேய்போ லிருந்துன் பிரமை கொள்வ தெக்காலம்.

8
  
பேய்போற் றிரிந்து பிணம் போற்கிடந்து பெண்ணைத்
தாய்போ னினைத்துத் தவமுடிப்ப தெக்காலம்.

9
  
கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகங்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்.

10
  
பெண்ணினல்லா ராசைப் பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டு மூடிக் கலந்திருப்ப தெக்காலம்.

11
  
வெட்டுண்ட புண்போல் விரிந்தவல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவு மெக்காலம்.

12
  
ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம்.

13
  
தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம்.

14