பக்கம் எண் :

332சித்தர் பாடல்கள்

உப்பிட்ட பாண்டம் உடைந்துகருக் கொள்ளுமுன்னே
அப்பிட்ட வேணியனுக் காட்படுவ தெக்காலம்.

44
  
சேவைபுரிந்து சிவரூப காட்சி கண்டு
பாதைதனைக் கழித்துப் பயனடைவ தெக்காலம்.

45
  
காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டதுபோல்
பாண்டத்தை நீக்கிப் பரமடைவ தெக்காலம்.

46
  
சோற்றுத் துருத்திதனைச் சுமந்தலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட் டுனையடைவ தெக்காலம்.

47
  
தொடக்கைச் சதமெனவே சுமந்தலைந்து வாடாமல்
உடக்கைக் கழற்றி உனையறிவ தெக்காலம்.

48
  
ஆசைவலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தி லொன்றி நிற்ப தெக்காலம்.

49
  
கூறறிய நால்வேதங் கூப்பிட்டுங் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்ப தெக்காலம்.

50
  
புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பி னிருளகல்வ தெக்காலம்.

51
  
தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவம் வந்துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம்.

52
  
பருவத் தலைவரொடும் புல்கியின்பங் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம் வந்து சிக்குவது மெக்காலம்.

53
  
தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்ட மெல்லாமறிந்து
குருவையறிந்தே நினைத்துக் கும்பிடுவ தெக்காலம்.

54
  
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போ லாவதினி யெக்காலம்.

55
  
பற்றற்று நீரிற் படர்தாமரை யிலைபோல்
சுற்றத்தை நீங்கிமனந் தூரநிற்ப தெக்காலம்.

56
  
சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி யெக்காலம்.

57