பக்கம் எண் :

312சித்தர் பாடல்கள்

பாலில் வெருகடியாய் - ஆத்தாளே
     பதிமண்ட லம்கொளவே
மேலும் வச்ரகாயமடி - ஆத்தாளே
     வேதையுமி நீராலே.
98
  
பழுக்கும் நவலோகம் - ஆத்தாளே
     பரமட்ட சித்தியுண்டாம்
அழுக்கெடுத்து வெள்ளீயம் - ஆத்தாளே
     அதில் ஈய நீர்வாங்கும்.
99
  
சித்திபெற்ற கற்பமடி - ஆத்தாளே
     தேவ வருடமதில்
அத்தியின் தன்பிலமாய் - ஆத்தாளே
     ஆயிரம் வயதிருப்பாய்.
100
  
உத்தமர்க்குச் சொன்னேன்நான் - ஆத்தாளே
     உயர வெளிகண்டதெல்லாம்
பத்தியுள்ள பத்தர்கட்கு - ஆத்தாளே
     பலிக்கும்பார் கண்டாயே.
101
  
பத்தியுடன் செய்துவந்தாள் - ஆத்தாளே
     பரம்பொருளுந் தோன்றுமடி
சித்தி அடைந்தவர்க்கு - ஆத்தாளே
     தெரியுமே சோதியுந்தான்.
102
  
மாணிக்கத்து உள்ளொளிபோல் - ஆத்தாளே
     மருவிய சோதிதனைப்
பேணித் தொழும்அடியார் - ஆத்தாளே
     பேசாப் பிரமமடி.
103
  
அன்றுமுதல் இன்றளவும் - ஆத்தாளே
     அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாக - ஆத்தாளே
     இருந்த ரகசியந்தான்.
104
  
ஓங்காரங் கொண்டு - ஆத்தாளே
     உள்மூலந் தான்தெரிந்து