வடக்குராதாவும் ஆம். அவையிரண்டும் சேர்ந்து கங்கைக்குத் தென்புறம் உள்ள வங்காள நாட்டின் பகுதிகளாக இலங்கி வந்தன. வங்காள தேசம் என்பது இக் காலத்திய வங்காள இராச்சியத்தின் கீழ்ப்பகுதியும் தென்பகுதியுமாம். சீர்விசயம் என்ற நாடு ஸ்ரீவிஜயம் என்ற புகழ்பெற்ற நாடாகும். இது சுமத்திராத் தீவில் அமைந்திருந்தது. அத் தீவின் கீழைக் கடற்கரையில் பண்ணை என்ற நாடு இருந்தது. மலையூர் என்பது ஸ்ரீவிஜயம் அல்லது பண்ணையாதல் வேண்டும். மாயிருடிங்கம் மலேயாவில் லீகாருக்கு அண்மையில் இருந்தது. அதற்குத் தெற்கில் இலங்காசோகம் விளங்கிற்று. மேவிலிம்பங்கமும், வளைப்பந்தூரும் இன்ன இடத்தில் இருந்தன என்பது அறிய முடியவில்லை. தலைத்தக்கோலமானது சிரா பூசந்தியின்மேல் இருந்த ஓரூராகும். மதமாலிங்கம் என்ற இடம் மலே தீபகற்பத்தில் பண்டன் விரிகுடாவுக்கு அண்மையில் இருந்ததெனத் தெரிகின்றது. இலாமுரி தேசம் வடசுமத்திராவின் ஒரு பகுதியாகும். இப்போது அதற்கு ‘லம்ரி’ என்னும் பெயர் வழங்குகின்றது. மானக்க வாரம் என்பது நிக்கோபார்த் தீவுத் தொகுதியாகும். கிடாரம் அல்லது கடாரம் என்பது பெனாங்கை அடுத்துள்ள கேடா என்னும் இடமாக இருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இராசேந்திரனின் வடநாட்டுப் படையெடுப்பானது ஒரு பெரும் திக்கு விசயமாகும். வட இந்தியாவில் பல மன்னர்களை அவன் வென்று வாகை சூடினான். அவன் வட இந்தியத் திக்குவிசயத்தில் ஈடுபட்டிருந்தபோது கஜினி முகமதுவின் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. கன்னோசி நாட்டை அப்போது ராஜ்யபாலன் என்ற மன்னன் அரசாண்டு வந்தான். கஜினி முகமது அவனுடைய நாட்டைக் கி.பி. 1018-ல் தாக்கினான். ராஜ்யபாலன் அவனை எதிர்த்து நின்று போராடாமல் நாட்டைக் கைவிட்டு ஓடிவிட்டான். கஜினி முகமதுவும் வழக்கம்போல் கோயில்களை இடித்தும், அவற்றின் உடைமைகளைச் சூறையாடியும், ஊருக்கு எரியூட்டியும் நாட்டுக்குப் பேரிழப்பை விளைத்தான். ராஜ்ய பாலனுடைய கோழைத்தன்மையைக் கண்ட அப்பக்கத்து மன்னர்கள் அவனைத் தண்டிக்க முற்பட்டனர். அவர்கள் சந்தெல்லர் மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் கன்னோசியைத் தாக்கி ராஜ்யபாலனைக் கொன்றனர் ; அவனுடைய மகன் திரிலோசன பாலனை அரியணை ஏற்றுவித்தனர். |