பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 279

வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு
தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை.

    இராசேந்திரனின் வடநாட்டுத் திக்கு விசயத்தின்போது ஏற்பட்ட
நிகழ்ச்சிகளைக் கோவைபட இணைத்து நோக்கும் போது போசராசன்,
காங்கேயன், மற்றும் பல மன்னருடன் கூட்டுக்கூடிக் கஜினி முகமதுவுடன்
போரிட்டு அவன் தொல்லையை ஒழித்துக் கட்டுவதற்காகவே அவனுடைய
வடநாட்டு நண்பர்களின் வேண்டுகோளின்படி அவன் வடநாட்டுக்குப் படை
திரட்டிச் சென்றான் என்று கருதத் தோன்றுகின்றது.

    இராசேந்திரன் கி.பி. 1018-ல் இலங்கை முழுவதையும் வென்று தன்
குடைக்கீழ்க் கொண்டுவந்தான். முதலாம் பராந்தகனிடம் தோற்றோடிய
வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டி நாட்டு
மணிமுடியையும் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டுக்கொண்டதுமன்றிச்
சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும்
பறித்துக் கொண்டு வந்தான். இலங்கைத் தீவு முழுவதும் சோழநாட்டு
மண்டலங்களுள் ஒன்றாக இணைத்துக்கொள்ளப்பட்டது. அத் தீவில் அவன்
சிவனுக்கும் திருமாலுக்கும் பல கோயில்கள் எழுப்பினான். அதே ஆண்டில்
சேரனும் தன் அரசுரிமையை இராசேந்திர சோழனுக்குப் பறிகொடுத்தான்.
அஃதுடன் ‘செங்கதிர்’ வீசிய மணிமாலை ஒன்றும் இராசேந்திரன் கைக்கு
மாறிற்று.

    இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்
பிரதிநிதியினிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப் பொறுப்பை
ஒப்படைத்தான் (கி.பி. 1018-19). இவனுக்குச் சடாவர்மன் சுந்தரபாண்டியன்
என்ற பட்டப்பெயரும் அளிக்கப்பட்டது. ஒரு மன்னனுக்கு ஏற்பட்டிருந்த
உரிமைகள் அத்தனையும் இவன் செலுத்தி வந்தான். இவன் தங்கியிருக்கும்
பொருட்டுப் பெரிய மாளிகை ஒன்றை இவனுக்கு இராசேந்திரன் மதுரையில்
கட்டிக்கொடுத்தான். சடாவர்மன் சுந்தரபாண்டியன் இருபத்து மூன்று
ஆண்டுகள் அரசாண்டான். நாஞ்சில் நாட்டிலுள்ள சசீந்திரத்துக்குச் சுந்தர
சோழ சதுர்வேதி மங்கலம் என்றொரு பெயரும் வழங்கலாயிற்று. கோட்டாறு
என்ற இடத்தில் இவன் சோழரின் படைகளில் ஒன்றை நிறுத்தி வைத்தான்.

    இராசேந்திரன் மேலைச் சளுக்கர்மேல் படையெடுத்துச் சென்றான். அந்
நாட்டு மன்னன் இராசசிம்மனை முயங்கி அல்லது முசங்கி என்ற இடத்தில்
முறியடித்தான் (கி.பி. 1021).