எனினும் இராசசிம்மன் தளராத ஆற்றலோடு சோழருடன் மீண்டும் போர் தொடுத்தான். இராய்ச்சூரை மீட்டுக் கொண்டு துங்கபத்திரை வரையில் தன் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டான். இரட்டபாடி ஏழரை இலக்கம் முழுவதையும் இராசேந்திரன் வென்றான் என்று அவனுடைய மெய்க்கீர்த்திகள் கூறுவது மிகைபாடாகும். இராசேந்திரனின் நாட்டம் அடுத்துக் கங்கை வெளியின்மேல் பாய்ந்தது. சோழப் படைத்தலைவன் ஒருவன் ஆணையின்கீழ்ப் படைகள் வடக்கு நோக்கிப் புறப்பட்டன. மேலைச் சளுக்க மன்னன் இரண்டாம் சயசிம்மனுக்குப் படைத்துணையாக நின்றவர்களான கலிங்கத்து அரசனும், ஒட்டவிஷய அரசனும் சோழரின் படைகளுக்கு அடிபணிந்தனர். இப் படைகள் மேலும் வடக்கே முன்னேறிச் சென்று, இந்திரதரன், இரணசூரன் ஆகியவர்களை வென்று புறங்கண்டு, இரணசூரனின் மூலபண்டாரத்தைச் சூறையாடித் தருமபாலன் என்ற மன்னனையும் வென்று முதுகுகாட்ட வைத்துக் கங்கைவெளியில் அடிவைத்தன. வங்க நாட்டுப் பாலவமிசத்து மன்னன் மகிபாலன் என்பான் படையின் தண்டநாதனுக்குத் தலைவணங்கினான். கங்கையாற்றைக் கடந்து சென்றும் சோழர் சிற்சில இடங்களில் போரிட்டு வெற்றி கொண்டார்கள். வங்காளம் முழுவதுமே சோழப் பேரரசின் மேலாட்சிக்கு இணங்கிற்று. வடநாட்டு வெற்றிகளுக்குப் பிறகு நாடு திரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்ற குளம் ஒன்றை வெட்டி அதில் கங்கைநீரைச் சொரிந்து, ‘கங்கா ஜலமயம்-ஜயஸ்தம்பம்’ என்று அதைப் பாராட்டித் தன் வெற்றிக்கு விழக் கொண்டாடினான். இராசேந்திரனுடைய படைகளுடன் இணைந்து சென்றவனான கருநாடகக் குறுநில மன்னன் ஒருவன் மேலை வங்கத்தில் குடியேறினான். அவன் வழியில் சமந்தசேனன் என்ற ஒருவன் தோன்றினான். அவன் வங்க நாட்டில் சேனர் பரம்பரை யொன்றைத் தொடங்கி வைத்தான். கங்கைக் கரைகளிலிருந்து சைவர்கள் சிலரை இராசேந்திரன் வரவழைத்தான் என்றும், அவர்களைக் காஞ்சிபுரத்தில் குடியேற்றினான் என்றும் திரிலோசன சிவாசாரியார் என்பார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல் கூறுகின்றது. கங்கைக்கரைப் போர்களில் வெற்றிவாகைசூடி மாபெரும் புகழுடன் திரும்பி வந்துகொடிருந்த தன் தண்டநாதனைச் சோழப் பேரரசன் இராசேந்திரன் கோதாவரிக் கரையில் எதிர்கொண்டான். அவ்வமயம் கலிங்கரும், ஒட்டவிஷயத்தாரும் அவனைத் தாக்கிப் போர் முழக்கம் செய்தனர். இராசேந்திரன் |