பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 281

அவர்களை ஒறுத்து ஒடுக்கினான். பிறகு தன் மருகன் இராசராச நரேந்திரனை
வேங்கி நாட்டு மன்னனாக மணிமுடி சூட்டுவித்தான். தன் மகள் அம்மங்கா
தேவியையும் அவனுக்கு மணம் முடித்துவைத்தான். வேங்கி நாட்டில்
அரசுரிமைக் குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அங்கு முதலாம்
சக்திவர்மன் இறந்தவுடனே அவனுடைய இளவலான விமலாதித்தன்
அரசுரிமை ஏற்றான். அவன் இராசேந்திரனின் தங்கை குந்தவையை
மணந்திருந்தான். அவனுடைய ஆட்சியும் கி.பி. 1019ஆம் ஆண்டுடன்
முடிவடைந்தது. குந்தவையின் மகன்தான் இராசராச நரேந்திரன். அவனுக்கு
அரசுரிமை எய்துவதை இரண்டாம் சயசிம்மன் எதிர்த்து வந்தான் ; தன்
மாற்றாந்தாய் மகன் ஏழாம் விஷ்ணுவர்த்தன விசயாதித்தன் என்பவனை
வேங்கி நாட்டின் அரியணை ஏற்றுவிக்க அவன் முனைந்திருந்தான். எனவே,
இராசராச நரேந்திரனின் முடிசூட்டு விழா முடிவுறாமல் காலந்தாழ்ந்து வந்து
கொண்டிருந்தது. கங்கைகொண்டு வெற்றிமுழக்கம் செய்து கொண்டிருந்த
இராசேந்திரனுக்கு அம் முடிசூட்டு விழாவையும் முற்றுவிக்கும் வாய்ப்பு
ஏற்பட்டது (கி.பி. 1035). சோழரின் சினத்துக்கு அஞ்சி நாட்டைக்
கைவிட்டோடிய விஷ்ணுவர்த்தன விசயாதித்தனும் அவனுக்குப் பக்கத்
துணையாக நின்ற சயசிம்மனும், கலிங்கரும், ஒட்டரும் சோழரால்
முறியடிக்கப்பட்டு உயிருக்கு அஞ்சி ஓடிப் பிழைத்தார்கள். ஆனால், இராசராச
நரேந்திரனின் தொல்லைகள் அஃதுடன் தீர்ந்தபாடில்லை. அவன் மீண்டும்
மீண்டும் பகைவருக்கு இடங்கொடுத்துத் தன் நாட்டைத் துறந்து ஓடவேண்டிய
நெருக்கடிகள் ஏற்பட்டன. இறுதியாக இராசேந்திர சோழன் பெரும்
படையொன்றை இராசராச பிரம்ம மகாராசன், உத்தமசோழன் மிலாடுடையான்,
உத்தமசோழ சோழகோன் என்ற படைத்தலைவர் மூவரின் தலைமையில்
அனுப்பிவைத்தான். களிதிண்டி என்ற இடத்தில் நிகழ்ந்த பெரும் போர்
ஒன்றில் இவர்கள் மூவரும் புண்பட்டு மாண்டுபோனார்கள். ஆனால், வெற்றி
சோழருக்கே கிடைத்தது. இம் மாபெரும் வீரர்கள் மூவரும் தனக்காற்றிய
நன்றியை வீரராசேந்திரன் மறந்தானல்லன்; தன் நன்றியின் சின்னமாக
அவர்கட்கு மூன்று கோயில்கள் எடுப்பித்தான்.

    இராசேந்திர சோழனிடம் மிகப் பெரியதொரு கடற்படை இருந்தது.
அதனுடைய பயன்பாட்டையும் கலங்களின் ஆழ்கடல் ஊரும் ஆற்றலையும்
தேர்ந்தறியும் அரிய வாய்ப்பு ஒன்று, எதிர் நோக்கி நின்று அவனை
அழைத்தது. தமிழகத்தின் மரக்கலங்கள் வாணிகச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு
பல நூற்றாண்டுகளாகக் கிழக்கிந்தியத் தீவுகளுக்கும் சீனத்துக்கும்
பாய்விரித்தோடிக்