பக்கம் எண் :

282தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

கொண்டிருந்தன. ஆனால், கி.பி. 10ஆம் நூற்றாண்டளவில் சீனத்தில்
ஏற்பட்டிருந்த உள்நாட்டுக் கலகங்களினால் இக் கடல் வாணிகம் தடைபட்டுப்
போயிருந்தது. அவ் வாணிகத்தை மீண்டும் தொடங்கும் முயற்சியில் சீனம்
ஈடுபடலாயிற்று. தென் கடல் நாடுகளுடன் வாணிகம் செய்துகொண்டிருந்த
அயல்நாட்டு வணிகர்களையும், கடல்கடந்து அன்னிய நாடுகட்குச் சென்றிருந்த
வணிகர்களையும் மீண்டும் சீனத்துடன் வாணிகத் தொடர்பு கொள்ளுமாறு
தூண்டும்பொருட்டுச் சீனத்துப் பேரரசன் தன் தூதுவரை அயல்நாடுகட்கு
அனுப்பிவைத்தான். அவர்களிடம் பொன்னையும், துணி வகைகளையும், தன்
அரசாங்க முத்திரையையும் ஒப்படைத்தான். அப்போது சுமத்திராவில் ஆண்டு
கொண்டிருந்த ஸ்ரீவிஜய மன்னர்கள் இவ்வழைப்புக்கு இணங்கிக் கி.பி. 1003-
1008 ஆண்டுகளில் தம் தூதுவர்களைச் சீனத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இராசராச சோழனின் தூதுவர்கள் முதன் முதல் கி.பி. 1015-ல் சீனத்துக்குச்
சென்றனர். இராசேந்திரனும் ஒரு தூது அனுப்பிவைத்தான். குலோத்துங்கன்
காலத்தில் (கி.பி. 1077) ஒரு தூது சீனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் மிக நெருங்கிய வாணிகத்
தொடர்பு வளர்ந்து வந்தது. சீனம் தன் வாணிகத் தொடர்பை மீண்டும்
தொடங்கிய காலத்திலிருந்து இருபத்தைந்து ஆண்டுக் கால அளவில்
(கி.பி.1003-1028) கிழக்கிந்தியத் தீவுகளைப் பற்றியும் அங்கு ஆட்சி புரிந்து
வந்த அரசர்களைப்பற்றியும் பல செய்திகளை அறிந்துகொள்ளுவதற்குப்
போதிய காலமும் வாய்ப்பும் சோழ மன்னருக்குக் கிடைத்தன. ஸ்ரீவிஜய
நாட்டின் சைலேந்திர மன்னனான மாரவிசயோத்துங்கன் இராசராச
சோழனுடைய உதவியைப் பெற்று நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை
என்ற பௌத்தமடம் ஒன்றைக் கட்டினான். இராசேந்திர சோழன் பட்டத்துக்கு
வந்த பிறகு அம் மடத்துக்குத் தன் தந்தை இராசராசன் நிவந்தமாகக்
கொடுத்திருந்த ஆனைமங்கலம் என்னும் கிராமத்தை அம் மடமே தொடர்ந்து
‘சூரியசந்திரர் உள்ளவரை’ அனுபவித்து வருமாறு ஆணை பிறப்பித்தான்.
எனவே, தான் ஆட்சிபுரியத் தொடங்கிப் பத்து ஆண்டுகட்குமேல்
கிழக்கிந்தியத்தீவு நாடுகளான ஸ்ரீவிஜயம், கடாரம் ஆகிய நாடுகளின்
மன்னருடன் இவன் தொடர்ந்து நட்புக்கொண்டிருந்தான் எனத் தெரிகின்றது.
எனினும், அவன் திடீரெனக் கடாரத்தின் மேலும் ஸ்ரீவிஜயத்தின்மேலும்
பாய்வதற்கு அவனைத் தூண்டிவிட்ட காரணம் இன்னதென விளங்கவில்லை.
ஒருவேளை சோழர்கள் சீனத்துடன் மேற்கொண்டிருந்த வாணிகத்
தொடர்பைத் துண்டித்துவிட ஸ்ரீவிஜய மன்னன் முயன்றனனாக வேண்டும்.
அன்றித் திக்குவிசயம் புரிந்து, கடல் கடந்து சென்று, பல நாடுகளின்மேல்