போர் தொடுத்து, அவற்றைத் தனக்கு அடிபணிய வைத்துத் தன் குடிமக்களும், அண்டை அயல்நாட்டு வேந்தர்களும் தன் வெற்றியை வியந்து பாராட்ட வேண்டும் என்ற பேரவா ஒன்று இராசேந்திரனைப் பிடர்பிடித்து உந்தியிருக்கக் கூடும். எக்காரணத்தாலோ இராசேந்திரன் கிழக்கிந்தியத் தீவு நாடுகளின்மேல் படையெடுத்துச் சென்று அவ்விடங்களில் ஆண்டு கொண்டிருந்த அரசரை வென்று திறைகொண்டான். இராசேந்திரனின் கல்வெட்டு மெய்க்கீர்த்திகளுள் ஒன்று அவனுடைய கடாரத்துப் போரை விளக்கமாகப் பாராட்டிப் புகழ்கின்றது. ‘அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச் சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய கடாரத்து அரசனை வாகையம் பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து, உரிமையின் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும், ஆர்த்து அவன் அக நகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத் தோரணமும், மொய்த்து ஒளிர் புனைமணிப் புதவமும், கனமணிக் கதவமும்... தொடுகடல் காவல் கடுமுரண் கிடாரமும்... மாப்பொரு தண்டால்...’ இராசேந்திரன் கைக்கொண்டான் என்பது அக்கல்வெட்டுக் கூறும் செய்தியாகும். கடாரத்து மன்னனிடமிருந்து இராசேந்திரன் கைப்பற்றிய முதல் நாடு ஸ்ரீவிஜயமாகும். அது சுமத்திராவில் உள்ளது. அதற்கு இப்போது பாலம்பங் என்று பெயர் வழங்கி வருகின்றது. பிறகு அவன் அவனுடைய மெய்க்கீர்த்தியில் கண்டுள்ள ஏனைய கிழக்காசிய நாடுகளையும் வென்று திறைகொண்டான். கடாரத்தைக் கலிங்கத்துப் பரணியானது ‘குளிறு தெண்திரை குரை கடாரம்’13 என்று குறிப்பிடுகின்றது. பட்டினப்பாலையின் உரையாசிரியரான நச்சினார்க்கினியர் அப்பாட்டில் குறிப்பிடப்படும் ‘காழகம்’ என்ற இடம் கடாரமாகும் என்று குறிப்பிடுகின்றார். பிங்கலந்தை நிகண்டும் இவருடைய கூற்றை உறுதிப்படுத்துகின்றது. தமிழகத்துக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் இடையே ஓடிய கடல்வழியின்மேல் கடாரம் அமைந்திருந்த காரணத்தினால், அதை வென்று தன் ஆணையின்கீழ்க்கொண்டு வருவது தமிழகத்தின் கடல் வாணிக வளர்ச்சிக்கு இன்றிமையாதது என்று இராசேந்திரன் உணர்ந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அக்காலத்தில் கடாரம் மிகவும் சிறந்ததொரு துறைமுகப்பட்டினமாக விளங்கி வந்தது. ஆகவே, கடாரத்தின்மேல் அவன் கொண்ட வெற்றியானது சோழர் சீனர் வாணிகத்தின் வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்துவிட்டது. 13. கலிங். 202. |