கடாரத்தின்மேல் வெற்றி கொண்டானாயினும் இராசேந்திரனின் போர்த் தொல்லைகள் ஓய்ந்தபாடில்லை. சிங்களத்தில் சு.கி.பி. 1029-ல் சுதரந்தரப் போராட்டங்கள் தலைதூக்கலாயின. பாண்டி நாட்டிலும், சேர நாட்டிலும் அரசியற் கிளர்ச்சிகள் மூண்டன. எனினும், இளவரசன் இராசாதிராசன் அவற்றை யெல்லாம் உடனுக்குடன் ஒடுக்கிவிட்டான் (கி.பி. 1018). இராசேந்திரனின் வாணாள் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. மேலைச் சளுக்க மன்னன் முதலாம் சோமேசுவர ஆகவமல்லன் (கி.பி. 1043-68) தீராத் தொல்லை கொடுத்துக்கொண்டேயிருந்தான். அதனால் இராசாதிராசன் அவன்மேல் படையெடுத்துச் சென்றான். கிருஷ்ணை நதிக்கரைமேல் உள்ள பூண்டி என்ற இடத்தில் இராசாதிராசன் சோமேசுவரனை வென்று வெற்றி வாகை சூடினான். கலியாணபுரியை அழித்து அங்கிருந்த துவாரபாலகர் சிலையைக் கவர்ந்துகொண்டு வந்தான். அச் சிலையைத் தாராசுரத்தில் இன்றும் காணலாம். சோழரின் படையெடுப்பினால் மேலைச் சளுக்கர் தலைகுனிய நேரிட்டது. அவர்களுடைய நாடும் சீர்குலைந்து போயிற்று. சோழர்கள் மைசூரிலும் சில போர்களில் ஈடுபடவேண்டிய நெருக்கடி நேர்ந்தது. அங்கு அவர்கள் பசுக்களைக் கவர்ந்து வந்ததாகவும், கொடும் போர்கள் விளைத்தனர் என்றும் அறிகின்றோம். இராசேந்திரன் சீரிலும், சிறப்பிலும், வீரத்திலும், நிருவாகத் திறனிலும் தன் தந்தை இராசராசனையும் மிஞ்சி நின்றான். ‘மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்’ என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிற்று இராசேந்திரனின் அரசியல். அவனுடைய விருகளில் சிறப்பானவை ‘முடிகொண்டான்’, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரங் கொண்டான்’, ‘பண்டித சோழன்’ என்பவையாம். புகழ்பெற்று விளங்கிய இராசேந்திரனின் வாணாள் கி.பி. 1044-ல் முடிவுக்கு வந்தது. போரில் மட்டுமன்றிக் கல்வி, கலை, சமயத்தொண்டு ஆகிய துறைகளிலும் இராசேந்திரன் இணையற்றுத் திகழ்ந்தான். அவனால் படைக்கப்பட்ட கலைக்கூடமான கங்கைகொண்ட சோழபுரத்தையே தன் தலைநகரமாகக் கொண்டு கலை வளர்ச்சிக்கான பணிகள் பலவற்றைப் புரிந்து வந்தான். |