பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 285

    இராசேந்திரன் மனைவியருள் சிறப்பாகக் கல்வெட்டுகளில்
குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் திரிபுவனம் அல்லது வானவன் மாதேவியார்,
முக்கோக்கிழாள், பஞ்சவன் மாதேவியார், வீரமா தேவியார் என்பவர்கள்
ஆவர். அரசன் இறந்தவுடன் அவனுடன் வீரமாதேவியார் உடன்கட்டையேறி
விட்டாள். இராசேந்திரனின் பிள்ளைகளான இராசாதிராசன், இராசேந்திரன்,
வீரராசேந்திரன் ஆகியவர்கள் ஒருவருக்குப்பின் ஒருவராகப் பட்டங்கட்டிக்
கொண்டார்கள். சோழபாண்டியப் பிரதிநிதியாக மதுரையினின்றும் அரசு
புரிந்துவந்த சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்பான் இம் மூவருள்
ஒருவனா அன்றி வேறானவனா என்பது விளங்கவில்லை. இவர்களேயன்றி
இராசேந்திரனுக்கு வேறு ஆண் மக்களும் இருந்தனர் எனத் தெரிகின்றது.
அவனுக்கு இரு பெண் மக்களும் உண்டு. ஒருத்தி அருண்மொழி நங்கையார்
அல்லது பிரானார். இவளுடைய உடன்பிறந்தானான இராசாதிராசன்
ஆட்சியில் விலையுயர்ந்த முத்துக் குடை ஒன்றைத் திருமழபாடிக்
கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்திருக்கின்றாள். மற்றொருத்தி
அம்மங்காதேவி என்பவள். இவள் கீழைச் சளுக்க மன்னன் முதலாம்
இராசராசனை மணந்து முதலாம் குலோத்துங்கனைப் பெற்றுக் கொடுத்தாள்.

முதலாம் இராசாதிராசன் (கி.பி. 1018-1054)

    இராசாதிராசன் தன் தந்தையுடன் இருபத்தைந்து ஆண்டுகள்
இணைந்திருந்து அவனுடைய அரசியலில் பொறுப்பேற்று ஆழ்ந்த ஆட்சித்
திறனும், போர்த்திறனும் வாய்க்கப் பெற்றிருந்தான். இவன் அரியணை
ஏறியவுடனே சிங்களத்தில் சோழரின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சிகள்
எழுந்தன. இராசாதிராசன் மிகவும் கடுமையான போர் நடவடிக்கைகளை
மேற்கொண்டு இக் கிளர்ச்சிகள் அனைத்தையும் அவ்வப்போது ஒடுக்கினான்.
அவன் சிங்களத்தில் இழைத்தனவாகக் கூறப்பெறும் சில கொடுமைகள்
சோழரின் செங்கோன்மைக்கு இழுக்கை விளைவித்தன. சிங்கள மன்னன்
விக்கிரமபாகு போரில் புண்பட்டு மாண்டான். அவனுடைய மணிமுடியை
இராசாதிராசன் கைப்பற்றிக் கொண்டான். அம் மன்னனது அன்னையின்
மூக்கையும் சோழர்கள் அறுத்துவிட்டனர்.

    சளுக்கரின் தொல்லைகள் மீண்டும் தலைதூக்கின. சளுக்க மன்னன்
சோமேசுவரனை எதிர்த்துச் சோழர்கள் இரண்டாம் முறையும் போர்
தொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது (கி.பி.1044-46). சளுக்கருக்குத்
துணை நின்ற மன்னர் பலரை