பக்கம் எண் :

86வடமொழி வரலாறு

     வாரணன் = கடல்தெய்வம். வடவர் வ்ரு (கவி, மறை, சூழ்)
என்பதை மூலமாகக் காட்டி அனைத்தையும் மூடும் வானம்
(All-enveloping sky) என்று பொருள் கூறுவர். இது வருணனை
மழைத் தெய்வமாகக் கொண்ட இடைக்காலத்திற்கு மட்டும்
பொருந்துமேயன்றி, கடல்தெய்வமாகக் கொண்ட முற்கால பிற்கால
நிலைமைக்குப் பொருந்தாது.      தமிழர் வாரணனை என்றும்
கடல்தெய்வமாகவே கொண்டனர்.

"வருணன் மேய பெருமண லுலகமும்"
(தொல். 951)

     இது 'வாரணன் மேய நீர்மண லுலகமும்' என்றிருத்தல் வேண்டும்.
தொல்காப்பியர் வருண என்னும் வடசொல் வடிவிற் கேற்ப வருணன்
என்று திரித்துக்கொண்டார்.

     வடவர் காட்டும் வ்ரு என்னும் மூலத்திற்குச் சூழ்தற் பொருளு முள்ளது.

     இனி, வரி என்னும் தமிழ்ச்சொற்கு மூடுதற் பொருளுமுள்ளது.

     வரிதல் = மூடுதல்.

     "புண்ணை மறைய வரிந்து" (திவ். திருவாய்.5:1:5).

வாலம்-வால, பால (b), வார

     வார்-வால் = நீண்ட வுறுப்பு. ஒ.நோ: நீர்-நீல்.

     "வால் குழைக்கு நாய்" (நாலடி. 213).

     வால்-வாலம் = 1. வால்.

     "வாலமும் பணமு மிருங்கையிற் பற்றி" (காஞ்சிப்பு.மணிகண்.14).

     2. நீண்டு ஒடுங்கிய துணி அல்லது கந்தை.

     வாலமுகம் = நீண்டமுகம்(உ. வ.).

வாலுகம்-வாலுக, பாலுக(b) = மணல்.

     வால் = வெள்ளை. வாலுகம் = வெண்மணல்.

     "வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பின்’’ (சிலப்.6:131).

     மா.அ.வி. "of doubtful derivation" என்று குறித்திருத்தல் காண்க.

வாளம்-வால

     வள்-வாள்-வாளம் = வட்டம், வட்டமான மதில், மதில் போன்ற
மலைத்தொடர்.