பக்கம் எண் :

வடிவேலு முதலியார் - 3

வடிவேலு முதலியார் - 3 (20-நூ)

ஊர்:மாங்காடு.
தந்தை:ஆதிமூல முதலியார்; தொண்டை மண்டல நல் வேளாளர்.
வாழ்ந்தகாலம்:9-11-1873 - 30-5-1949.

இவர் இளமையிலேயே பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டார். குறைந்த ஊதியத்தில் அலுவல் பார்க்கத் தொடங்கினார். அலுவலர்களுக்கிடையே சூ. அப்பன் செட்டியார் என்ற தமிழறிஞரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தொடக்கத்தில் அச்சுக்கோர்ப்பாளராகத் தொழில் புரிந்து பின்னர் பக்கிங்காம் அண்ட் கர்நாடிக் ஆலையில் எழுத்தராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அக்கல்லூரியில் பரிதிமாற் கலைஞர் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். வடிவேலு முதலியார் தமிழாசிரியராகப் பணியாற்றியதுடன் சில இதழ்களுக்கும் ஆசிரியராக இருந்தார். மருத்துவ நூல்களையும் கற்றுப் புலமை பெற்றார். சில ஆண்டுகள் சென்னை அரசினரின் இந்திய மருத்துவக் கல்லூரியில் சித்த வகுப்பில் சித்த மருத்துவப் பாட நூல்கள் எழுதும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

நூல்:

தாயுமானவர் பாடல்-உரை, ஒளவை குறள்-உரை, ஞானவெட்டியான்-உரை, திருச்செந்தூர்க் கலிவெண்பா-உரை, மஸ்தான் சாகிபு பாடல்-உரை, அகத்தியர் பரிபூரணம் உரை, அகத்தியர் ஐந்நூறு-உரை, பட்டினத்துப் பிள்ளையார் வரலாறு.

வடிவேலு முதலியார், தி (20-நூ)

ஊர்:திருவெண்ணைய் நல்லூர்.

இவர் தி. நா. சுப்ரமணிய முதலியாரிடம் கல்வி கற்றுப் புலமை பெற்றார். பொதுநலச் செயல்களில் பெயர் பெற்று விளங்கினார். கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.

நூல்:

இராசப்ப நாவலர் இயற்றிய ‘திருவெண்ணெய் நல்லூர்க் கலம்பகம்’ என்னும் நூலுக்கு வழங்கிய சாற்றுக்கவி.