வரதுங்கராம பாண்டியன் அரசராகவும் புலமையாளராகவும் திகழ்ந்ததோடு நல்ல கொடையாளியாகவும் திகழ்ந்தார். அதிவீரராமன் ஆட்சிக் காலத்தில் இளவரசராகப் பட்டம் பெற்றபின் கோவிந்தப் பட்டன் என்ற ஒருவனுக்குச் சிலாரிப்பட்டி என்ற ஊரைத் தானமாக வழங்கினான். இராம கிருட்டிணப்ப நாயக்கன் வேண்டுகோளுக்கு ஏற்ப நதிக்குடி என்ற ஊரை அதிவீரராமன் பெயரால் அதிவீரராமபுரம் என்று பெயரிட்டுப் பல அந்தணர்களுக்குத் தானம் செய்தான். | நூல்: | பிரமோத்தர காண்டம், கொக்கோகம், திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருக்கருவை வெண்பா அந்தாதி, திருக்கருவை கலித்துறை அந்தாதி. |
பிரமோத்தர காண்டம்: இது பஞ்சாக்ஷரம், விபூதி, சோமவாரம், பிரதோஷம் இவற்றின் பெருமைகளைக் கூறுவது. வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பெற்றது. பாயிரம் உள்பட 22 அத்தியாயங்களையும் 1310 விருத்தங்களையும் உடையது. கொக்கோகம்: இது வடமொழியிலுள்ள கொக்கோக நூலைத் தமிழாக்கம் செய்யப் பெற்றது. இதனுள் பெண்களின் இயல்பும், மதன சாத்திரத்திற்குரிய பிறவும் விளக்கப் பட்டுள்ளன. திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி: திருக்கருவை என்னும் கரிவலம் வந்தநல்லூர் சிவபிரான் மீது பாடப் பெற்றது; பத்துவகைச் சந்தங்களால் இயன்றது; குட்டித் திருவாசகம் எனப் பாராட்டப்பெறுவது. திருக்கருவை வெண்பா அந்தாதி: இது வெண்பாவால் இயன்றது. திருக்கருவை கலித்துறை அந்தாதி: இது கலித்துறையால் இயன்றது.
|