பக்கம் எண் :

199

பாடினார் என்று கூறப்படுகிறது. வில்லிபுத்தூரார் பாரதத்திற்கு 23 பாடல்களில் ஒரு சிறப்புப் பாயிரம் வரைந்துள்ளார். இப்பாயிரத்தில் அக்காலத்தில் தமிழ் மொழி இருந்த நிலை நன்கு விளக்கப்பட்டுள்ளது. வரபதி ஆட்கொண்டான் என்பவன் தமிழ்ச்சங்கம் ஒன்று நிறுவினான் என்றும், அவன் விருப்பப்படியே பாரதம் பாடப் பெற்றது என்றும் கூறப் பெற்றுள்ளது.

வரராசையுலா ஆசிரியர் (17-நூ)

நூல்: வரராசை உலா.

வரராசை என்பது சங்கர நயினார் கோயிலைக் குறிப்பது; இந்நூல் அக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபிரான் மீது பாடப்பெற்றது. வடமலையப்ப பிள்ளையான் செய்த திருப்பணிகளைச் செவ்விய முறையில் விளக்குவது.

வரராம யோகி ( )

வே.பெ: யோகீசுவர ராமன் பிள்ளை.
ஊர்: நாஞ்சில் நாட்டில் வலிய மேலெழுத்து.

இவர் இளமைப் பருவத்திலேயே சிறந்த கல்வியைப் பெற்றார். தமது 15-ஆவது வயதிலேயே அறிஞராகத் திகழ்ந்தார். கணிதத்தில் திறமை பெற்றுக் கணக்கு வேலை பார்த்து வந்தார். திருவிதாங்கூர் அரசர் இவரது திறமையைப் பாராட்டி திருவல்லாக்கோட்டம் குட்டம் பேரூர் என்ற ஊரில் வீடும், நிலமும், தோட்டமும் வழங்கினார். இவர் 80 வயது நிறைவு பெற்று உடல் நலிவுற்ற நிலையிலும், திருவிதாங்கூர் அரசர் சங்கர நாராயணப் பிள்ளை என்பவரை இவருக்கு உதவியாக நியமனஞ் செய்து அலுவல் பார்த்துவர ஏற்பாடு செய்தார்.